சென்னை: வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிக்கான சான்றிதழ்களை 27ம் தேதிக்குள் தேர்வாணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்)-ன் தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகளுக்கு கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் நான்காவது பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை நேற்று முதல் வரும் 27ம் தேதி வரை தேர்வாணைய இணைய தளத்தில் ஒரு முறைப் பதிவு பிரிவின் மூலம் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
