- கேப்டன் கமலினி
- ஆரஞ்சு
- ஃப்ரேயர் கோப்பை
- சென்னை
- பெண்கள் ஃப்ரேயர் கோப்பை
- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
- TNCA
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்(டிஎன்சிஏ) சார்பில் பெண்களுக்கான ஃப்ரேயர் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியில் பல்வேறு மாநில வீராங்கனைகள் பங்கேற்ற மொத்தம் 8 அணிகள் விளையாடின. லீக் சுற்று ஆட்டங்கள் ஆக.11ம் தேதி தொடங்கியது. இறுதி ஆட்டம் நேற்று சென்னையில் நடந்தது. கிரீன் இன்வேடர்ஸ், ஆரஞ்ச் டிராகன்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கி கிரீன் அணி 50ஓவர் விளையாடி 155ரன்னில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை அனுராகினி 52, கேப்டன் அனுஷா 36, மோகனப்ரியா 28ரன் எடுத்தனர். ஆரஞ்ச் அணியின் அன்ரிதா 3, சோபியா 2, நிதி, வைஷ்ணவி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
அதனையடுத்து 156ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆரஞ்ச் அணி களமிறங்கியது. அந்த அணியின் பார்முஹில், ஜான்வி குண்டு குறைந்த ரன்னில் வெளியேறினாலும், தொடக்க வீராங்கனையான கேப்டன் கமலினி அதிரடியாக விளையாடி சதம் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அதனால் ஆரஞ்ச் அணி 33.1ஓவரிலேயே விக்கெட் இழந்து 156ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதுடன் ஃப்ரேயர் கோப்பையையும் வசப்படுத்தியது. ஆரஞ்ச் அணியின் ஆட்ட நாயகி கமலினி 113(110பந்து, 12பவுண்டரி), பொறுப்புடன் விளையாடிய வைஷ்ணவி 26(64பந்து, 1பவுண்டரி) ரன்னுடன் கடைசி வரை களத்தில் நின்றனர். இருவரும் 3வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 105ரன் குவித்தனர். கிரீன் அணியின் நிடா ரெஹ்மான், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
