சென்னை: பல்லாவரத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் வேகமாக சென்றபோது ஏற்பட்ட விபத்தில், சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும், வடமாநில தொழிலாளர்கள் உள்பட 3 பேர் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெறும் சாலையில் (ஓல்டு டிரங்க் ரோடு) வெள்ளிக்கிழமை தவிர்த்து, மற்ற நாட்களில் இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை அதிவேகமாக, அபாயகரமாக இயக்கி ரிலீஸ் எடுப்பது மற்றும் பந்தயம் கட்டி ரேஸ் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து. போலீசாருக்கு ஏற்கனவே பலமுறை புகார்கள் தெரிவித்தபோதும் கூட, அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்த அப்துல் அகமது (17). ஏசி மெக்கானிக்கான இவர், தனது சகோதரனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, அதே பகுதியை சேர்ந்த 11வது வகுப்பு படிக்கும் சுஹேல் அகமது (15) என்ற மாணவனை அழைத்துக்கொண்டு, பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைபெறும் இடத்திற்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக சென்றுள்ளான். வண்டியை அப்துல் அகமது ஓட்ட, பின்னால் சுஹேல் அகமது அமர்ந்து வேடிக்கை பார்த்துள்ளான். வண்டி பல்லாவரம் சந்தை சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் தவறான வழியில் ஒரே ஸ்கூட்டரில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர்.
திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், சுஹேல் அகமது என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற, 4 பேரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்து உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த சிறுவன் சுஹேல் அகமது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்கூட்டரில் வந்த 3 பேரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த முகர்ஜி (23), அங்கீத் ராஜன் (23) மற்றும் டெல்லியை சேர்ந்த அருண்சர்மா (20) என்பதும், இவர்கள் விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்ததும், இரவு பணி முடிந்ததும் ஜமீன் பல்லாவரத்தில் தாங்கள் தங்கியுள்ள அறைக்கு செல்வதற்காக வேகமாக சென்றபோது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. மேலும், விபத்து தொடர்பாக போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த டெல்லியை சேர்ந்த அருண்சர்மா, நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். மேலும், 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
