வேப்பனஹள்ளி, ஆக.20: வேப்பனஹள்ளி அருகே கர்நாடக மாநில எல்லையோர கிராமங்களான எப்ரி, சிங்கிரிப்பள்ளி, கங்கமடுகு ஆகிய பகுதிகளில், கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் இரவு நேரங்களில், வனப்பகுதியிலிருந்து வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதன் காரணமாக தற்போது பயிரிடப்பட்டுள்ள நெல், ராகி, வாழை போன்ற பயிர்களை அடியோடு அழிந்து வருகிறது. இதனால் இனி விவசாயம் செய்வதில் பயன் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொதுமக்களுடன் இணைந்து வனத்துறையினரும், இப்பகுதியில் முகாமிட்டு யானைகளை, கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் யானைகள் மீண்டும் தமிழக கிராமப்பகுதிகளுக்கு வந்து விடுவதால், செய்வதறியாது திகைத்து வருகின்றனர். அரசு முழு முயற்சியுடன் யானைகள் கிராமப்புறங்களுக்குள் நுழையாத வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
