கிருஷ்ணகிரி, டிச.17: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மஞ்சுநாதா லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரன் (35). தனியார் நிறுவன ஊழியரான இவரது மனைவி விஜயா (23). இவர்களுக்கு 6 வயதில் மகள், 3 வயதில் மகன் உள்ளனர். கடந்த 13ம் தேதி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற விஜயா, பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக விசாரித்ததில், அதே பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் திருப்பத்தூரைச் சேர்ந்த குறளரசன்(33) என்பவருடன், விஜயாக்கு ஏற்கனவே பழக்கம் இருந்தது தெரியவந்தது. அவர் மனைவி, குழந்தைகளை கடத்தி சென்றிருக்கலாம் என ருத்ரன், சூளகிரி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
