×

கண்டலேறு அணையிலிருந்து சென்னை குடிநீருக்காக கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்திற்கு 2வது முறையாக தண்ணீர் திறப்பு: வினாடிக்கு 200 கன அடி வரத்து 269 மில்லியன் கன அடி இருப்பு

ஊத்துக்கோட்டை, ஆக.20: ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் கண்ணன்கோட்டை நீர்தேக்கத்திற்கு 2வது முறையாக திறக்கப்பட்டது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா – தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், கண்டலேறுவில் திறக்கப்பட்ட தண்ணீர் 152 கி.மீ. தூரம் கடந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டிற்கு கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி வந்தடைந்தது. ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க வேண்டிய 8 டிஎம்சி தண்ணீர், ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தொடங்கியது. இதில், நேற்று வரை 1.47 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. மீதமுள்ள தண்ணீரை அக்டோபர் மாதத்திற்குள் ஆந்திர அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தற்போது ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1,750 கன அடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்ட்டில் வினாடிக்கு 524 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. தற்போது, ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டில் இருந்து 2வது முறையாக கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகையில் உள்ள புதிய நீர்த்தேக்கத்திற்கு நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் தொடக்கத்தில் வினாடிக்கு 20 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது வினாடிக்கு 200 கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது. கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. இதில் தற்போது 269 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பில் உள்ளது. நீர் வெளியேற்றம் ஏதும் இல்லை. 36.61 அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை ஏரியின் நீர்மட்டம் 29.16 அடி உயரத்தில் உள்ளது. முதன்முறையாக கடந்த 2022ம் ஆண்டு கண்ணன்கோட்டை ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kandaleru Dam ,Kannankottai Reservoir ,Chennai ,Uthukottai ,Krishna ,Andhra Pradesh ,Andhra Pradesh government ,Tamil Nadu ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...