×

கெங்கவல்லி அருகே தொடர் மழையால் நிரம்பி வழியும் வலசக்கல்பட்டி ஏரி

கெங்கவல்லி, டிச.10: தொடர் மழையால், வலசக்கல்பட்டி ஏரி நிரம்பி, கோடி வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் 5 கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். கெங்கவல்லி அடுத்த  74.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள வலசக்கல்பட்டி ஏரி 100 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். 40 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் மூலம், சுற்றுவட்டார கிராமங்கள் குடிநீர் வசதி, பாசன வசதி பெறுகின்றன. சேலம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, நேற்று அதிகாலை 5 மணி அளவில் வலசக்கல்பட்டி ஏரி, தனது  முழு கொள்ளளவான 40 அடியை எட்டியது. மேலும், உபரிநீர் கோடி (தடுப்பணை) வழியாக வெளியேறியது. ஏரி நிரம்பியுள்ளதால், சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 74.கிருஷ்ணாபுரம், கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில், கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்படாது. மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், குடும்பத்தினருடன் திரண்டு 5 கிடா வெட்டி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இரண்டாவது ஆண்டாக வலசக்கல்பட்டி ஏரி நிரம்பி, கோடி வழியாக உபரிநீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Valasakkalpatti Lake ,Kengavalli ,
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு