×

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அல்காரஸ் சாம்பியன்: மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன்

 

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் சின்னர் உடல்நலக் குறைவால் வெளியேறியதால் சாம்பியன் பட்டம் அல்காரஸ் வென்றார். அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதலாவது அரையிறுதியில் நேற்று, ஸ்பெயினை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22), ஜெர்மனியை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (28) மோதினர்.

போட்டியின் துவக்கம் முதல் அல்காரசின் கரமே ஓங்கி இருந்தது. முதல் செட் போட்டியில் அநாயாசமாக ஆடிய அல்காரஸ் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டை மேலும் ஆக்ரோஷத்துடன் ஆடிய அல்காரஸ், 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால் அற்புத வெற்றி பெற்ற அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு அரை இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர் (24), பிரான்சை சேர்ந்த அறிமுக வீரர் டெரென்ஸ் அத்மேன் (23) உடன் மோதினார். அனுபவமற்ற போதிலும் முதல் செட்டில் சின்னருக்கு ஈடுகொடுத்து ஆடினார் அத்மேன். இருப்பினும் அந்த செட்டை, 7-6 (7-4) என்ற புள்ளிக் கணக்கில் சின்னர் வசப்படுத்தினார். அடுத்து நடந்த 2வது செட்டை சுதாரித்து ஆடிய சின்னர், 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடிய சின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியின் முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சினெர் மேற்கொண்டு விளையாடாமல் விலகினார். இதனையடுத்து அல்காரஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அத்துடன் சாம்பியன் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது..

மற்றொரு ஆட்டத்தில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் ஜாஸ்மின் பவுலினியை 7-5,6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஸ்வியாடெக் பட்டம் வென்றார். மேலும் உலக நம்பர் 2 இடத்தை மீண்டும் பிடித்தார். உலகின் 3வது இடத்தில் உள்ள போலந்து டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக், சின்சினாட்டியில் நடந்த WTA 1,000 போட்டியில் இத்தாலிய ஜாஸ்மின் பயோலினியை 1 மணி நேரம் 49 நிமிடங்களில் 7-5 மற்றும் 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து சாம்பியனாக முடிசூட்டப்பட்டார்.

 

 

Tags : Alcarus ,Cincinnati Open Tennis Finals ,Iga Svyatech Champion ,Cincinnati ,Sinner ,Cincinnati Open ,Cincinnati, USA ,
× RELATED கவுகாத்தி மாஸ்டர் பேட்மின்டன்...