×

வீட்டு வசதி வாரியத்திற்காக 45 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட 743 ஏக்கரை ரிலீஸ் செய்து கொடுக்க நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி தகவல்

 

சென்னை: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: வீட்டு வசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன்பு சுமார் 40, 45 ஆண்டு காலத்திற்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட முயற்சி எடுக்கப்பட்டு அது முழுமையாக நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் அந்த நிலங்கள் வாரியமும் பயன்படுத்த முடியவில்லை, அதனுடைய உரிமையாளரும் அதன்மீது முழுமையான உரிமையை எடுக்க முடியவில்லை என்ற நிலை இருந்தது.

இப்போது அந்த நிலங்கள் ஐந்து வகையாக பிரிக்கப்பட்டது. அதன்படி அரசாணை வெளியிட்டு, ஏறத்தாழ 4,396.44 ஏக்கர் ரிலீஸ் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பெரும்பகுதி அவர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இன்னொரு 743 ஏக்கர் இருக்கிறது. அதில் பல உடனே கொடுத்து விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. சிலவற்றில், நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. எனவே, அதையும் பகுப்பாய்வு செய்து விட்டு, அதற்கு பிறகுதான் அதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஏறத்தாழ 90% பிரச்சனைகள் 40 ஆண்டு காலமாக சிரமப்பட்டு வந்த அந்த மக்களுக்கு தீர்க்கப்பட்டிருக்கிறது.

3 மற்றும் 4வது வகையை பொறுத்தவரை, அதற்காக இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள் அதை இப்பொழுது ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் பரிந்துரையின்படி அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். டிசம்பர், ஜனவரிக்குள் மீதமுள்ள அந்த நிலத்தையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்துவிட முடியும். அதே நேரத்தில் வீட்டுவசதி வாரியத்திற்கோ, அரசாங்கத்திற்கோ இதில் எந்தவிதமான நஷ்டமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வாரியம் என்ன செலவு செய்திருக்கிறதோ, அந்த தொகை மற்றும் அதற்கான வட்டியினை இது அரசாங்கத்திற்கோ, வாரியத்திற்கோ திருப்பி கிடைக்க வேண்டும். அது மிக நியாயமானதாக அவர்கள் தாங்கக்கூடிய சக்தி படைத்ததாக அது இருக்கும்.

எங்களிடத்தில் முதலில் மனு கொடுத்தபோது கூட மனுக்களை நாங்கள் வாங்கி அதன் மீது ஆய்வு செய்யுங்கள் என்று சொல்வதற்கு பதிலாக, 16 இடங்களில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மனுக்கள் போட்டார்கள். புகார் பெட்டியில் வரப்பெற்றுள்ள மனுக்களின் அடிப்படையில் அதை ஒரு ஆதாரமாக வைத்துதான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எங்களை பொறுத்தவரை இதில் ஒரு சிறு தவறும் கூட ஏற்படக்கூடாது. யாருடைய பரிந்துரையின்பேரிலும் இது நடைபெற கூடாது. இதில் ஒரு கோடு போட்டது போல்தான் அந்த கமிட்டியும் அறிக்கையை கொடுக்க இருக்கிறார்கள். வாரியமும் அப்படித்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறது. எனவே, அந்த கோட்டிற்கு இந்த பக்கம் இருப்பவர்களை யாராவது அதிகாரியையோ, அமைச்சரையோ பார்த்து இந்த பக்கம் கொண்டுவரவோ அல்லது அந்த பக்கம் கொண்டு போகவோ முடியாது.

அப்படிப்பட்ட ஒரு நிலையைத்தான் நாங்கள் இதில் உருவாக்கியிருக்கிறோம். எந்த தவறும் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் இதிலிருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Housing Board ,Minister ,Muthusamy ,Chennai ,Housing ,Development ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...