சென்னை: கடந்த 2006-2010ம் ஆண்டு வரை வருவாய், சட்டம் சிறை மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி, அவரது மனைவி பி.சுசிலா, தற்போதைய பழனி சட்டமன்ற உறுப்பினரும் அவரது மகனுமான பி.செந்தில்குமார், மற்றொரு மகன் பி.பிரபு உள்ளிட்டோர் மீது திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து வழக்கை விரிவாக விசாரணை நடத்திய திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம், ஐ.பெரியசாமி உள்ளிட்ட நான்கு பேரையும் விடுவித்திருந்தது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை மேற்கண்ட விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,‘‘கீழமை நீதிமன்றம் வழங்கிய விடுவிப்பை ரத்து செய்வதாகவும், அதேப்போன்று வழக்கு தொடர்பான விசாரணையை நாள்தோறும் நடத்தி ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன் பிரபு ஆகியோர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்களானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்திருந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
