ஊத்துக்கோட்டை, ஆக. 19: ஆரணி பேரூராட்சியில் சிதிலமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். ஆரணி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு வியாபாரிகள், நெசவாளர்கள், விவசாயிகள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 9வது வார்டு ஜி.என்.செட்டி தெருவில் ஆரணி பேரூராட்சி அலுவலகம், நூலக கட்டிடம், கால்நடை மருத்துவமனை, அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிகள், பத்திர பதிவு அலுவலகம் ஆகியவை இயங்கி வருகின்றன. இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்ட சாலையானது கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட சாலை மீண்டும் சேதமடைந்துள்ளது. தற்போது சுமார் 2 கி.மீ தொலைவிற்கு சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர். அவ்வப்போது, பெய்யும் மழையால் சாலை முழுவதும் சேரும், சகதியுமாக காணப்படுவதோடு, பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். சகதியில் சிக்கும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். கனரக வாகனங்கள் செல்லும்போது சேற்றுநீர் பாதசாரிகள் மீது தெரிக்கிறது. எனவே, வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக சென்று வரும் வகையில் சிதிலமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
