திருத்தணி, ஆக.18: திருத்தணி அருகே, கனகம்மாசத்திரம் பகுதியில் உள்ள முத்துக்கொண்டாபுரம் கிராமத்தில் காக்காத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் கிராம மக்கள் அம்மனை தரிசித்து வழிபடுவது வழக்கம். வழக்கம்போல், நேற்று காலை கோயிலுக்கு பூஜை செய்ய சென்ற பூசாரி வெங்கடேசன் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3 சிலைகளில் 2 அடி உயரம் கொண்ட பித்தளையால் ஆன தண்டு மாரியம்மன் சிலை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயை அழைத்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். சிலை திருட்டு குறித்து கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர். இத்திருட்டு சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
