×

‘102’ சேவை மூலம் 2 லட்சம் தாய்மார்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: ‘102’ சேவை மூலம் 2 லட்சத்திற்கு மேற்பட்ட தாய்மார்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப கால குழந்தைப் பருவ வளர்ச்சி என்பது குழந்தை நலனில் ஒரு முக்கிய அங்கமாகும். இது கருவுறுதல் முதல் குழந்தை பிறப்பு வரையுள்ள பகுதி, சிறுகுழந்தை பருவம் (0-1 வயது) மற்றும் ஆரம்ப கால குழந்தை பருவம் (1-6 வயது) என தனித்துவமான கட்டங்களை உள்ளடக்கியதாகும்.

ஆரம்பகால குழந்தைப் பருவத்தில் அறிவாற்றல், பேச்சு, செயல், சமூக மற்றும் உணர்வுத்திறன் வளர்ச்சி ஆகியவை மிக முக்கிய பங்காற்றுகின்றன. இதன் அதிக முக்கிய தாக்கத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஆரம்ப கால குழந்தைப் பருவ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து டிஜிட்டல் தொழில் நுட்பம் முறை மூலம் கண்காணிப்பு, தனிநபருக்குரிய தகவல் அளிப்பு மற்றும் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற வழிமுறைகள் மூலம் ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சியியை மேம்படுத்திவருகிறது.

குறிப்பாக 5 இருக்கைகள் கொண்ட 102 என்ற ஆரம்ப கால குழந்தை பருவ வளர்ச்சி கண்காணிப்பு தொலைபேசி மையத்தை அமைத்து தொடர்ந்து கர்ப்பிணிகள், பின்பேறுகால தாய்மார்கள் மற்றும் 2 வயது வரையுள்ள குழந்தைகளின் தாய்மார்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கி வருகிறது.

இம்மையத்தின் மூலம் கர்ப்பக்கால பராமரிப்பு, ஆரம்ப கால குழந்தை பருவ வளர்ச்சி, தடுப்பூசி வழங்கல், கர்ப்பக்காலத்தில் உள்ள காரணிகள், குழந்தைகள் கண்காணிப்பு, ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு முறைகள் போன்றவை குறித்த தேவையான தகவல்கள், நினைவில் கொள்ள வேண்டிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பராமரிப்புப் பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியல் விவரங்கள் இத்தொலைபேசி மையங்களுக்கு அளிக்கப்பட்டு அக்குழந்தைகளின் தாய்மார்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குழந்தையின் சரியான உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி மற்றும் குழந்தை நலமுடன் இருக்கும் நிலையை உறுதிப்படுத்துகின்றனர். ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை 2,14,580 தாய்மார்கள் இந்த ஆரம்ப கால குழந்தை பருவ வளர்ச்சி கண்காணிப்பு தொலைபேசி மையங்கள் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுள்ளன.

Tags : Health Department ,Chennai ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...