தக்கலை: குமரி மாவட்டம், தக்கலை டிராபிக் போலீசார் நேற்று முன்தினம் இரவு பழைய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் இருந்தனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி காலி டெம்போ வேகமாக வந்தது. டிராபிக் போலீஸ்காரர் பெல்ஜின் ஜோஸ் சைகை செய்து டெம்போவை நிறுத்தினார். உடனே டிரைவர் டெம்போவை நிறுத்தி முன் பக்க கதவை திறந்தவாறு ஆவணங்களை தேடுவது போல் நடித்தார்.
போலீஸ்காரர் பெல்ஜின் ஜோஸ், திறந்த நிலையில் இருந்த டெம்போவின் முன் பக்க கதவை பிடித்தவாறு சோதனை செய்தார். திடீரென டிரைவர் வேகமாக வண்டியை கிளப்பினார். சுதாரித்த போலீஸ்காரர் பெல்ஜின் ஜோஸ் முன் பக்க கதவை பிடித்து தொங்கினார். ஆனால் டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியதால், அதில் தொங்கிக் கொண்டே பெல்ஜின் ஜோஸ் கூச்சலிட்டார்.மற்ற போலீசார்பைக்கில் அந்த டெம்போவை துரத்தினர்.
சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வேகமாக சென்ற டிரைவர், பின்னர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பினார். முன் பக்க கதவில் தொங்கி கொண்டு வந்த போலீஸ்காரர் பெல்ஜின் ஜோஸ் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மற்ற போலீசார் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பெல்ஜின் ஜோஸ் புகாரின்படி தக்கலை போலீசார் வழக்கு பதிந்து டெம்போ டிரைவர் அழகப்பபுரத்தை சேர்ந்த அருண்சுந்தரை (44) கைது செய்தனர்.
