×

அன்புமணி பெயரில் கொலை மிரட்டல்: ராமதாசின் தனி செயலாளர் டிஜிபியிடம் புகார்

சென்னை: அன்புமணி பெயரில் மர்ம நபர்கள் தனக்கும், குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக டிஜிபியிடம் ராமதாசின் தனி செயலாளர் புகார் மனு கொடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசின் தனி செயலாளர் சுவாமிநாதன், தமிழக டிஜிபியிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், சென்னை, பாலவாக்கம், அண்ணா சாலை முகவரியில் கடந்த ஒரு வருடமாக என் மனைவி, மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வருகிறேன். பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசின் தனி செயலாளராக உள்ளேன். ராமதாஸ், அன்புமணி இடையே அரசியல் பிரச்னை குறித்து தவறான புரிதல் இருக்கிறது. இதனால் போட்டியாக தனது அரசியல் நடவடிக்கைகளை அன்புமணி மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 15ம் தேதி இரவு 8.15 மணியளவில் நான் என் மனைவி மற்றும் மகனுடன் பாலவாக்கம் கடற்கரையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வந்து, ராமதாசுக்கு உதவ வேண்டாம். உங்கள் மனைவி மற்றும் மகனின் வாழ்க்கை முக்கியம் என்றால் ராமதாசை விட்டு வெளியேற வேண்டுமென என்னை மிரட்டினர். அவர்களிடம் நீங்கள் யார், ஏன் இந்த மிரட்டல் விடுக்கிறீர்கள் என்று அங்கிருந்தவர்கள் கேட்டனர். அப்போது அன்புமணி பெயரில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அன்புமணி, சவுமியா பெயரில் சதித் திட்டம் நடப்பதாக நான் சந்தேகிக்கிறேன். மேலும் ராமதாசின் தனி செயலாளர் பதவியில் இருந்து என்னை வெளியேற்றும் தீயநோக்கில் சிலர் செயல்படுகின்றனர். எனவே மிரட்டல் விடுத்தவர்கள் மற்றும் அன்புமணி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனது உயிர் மற்றும் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Tags : Anbumani ,Ramadoss ,DGP ,Chennai ,Swaminathan ,PMK ,Tamil Nadu DGP ,
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை