×

ஸ்ரீநூக்காலம்மன் கோயிலில் 36ம் ஆண்டு தீமிதி திருவிழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் – எண்டத்தூர் சாலையில் ஸ்ரீநூக்காலம்மன் கோயிலில் உள்ளது. இக்கோயிலின் 36ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நங்கையர்குளத்திலிருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர், அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் கோயில் வளாகத்தில் பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டு, வேப்பிலையாடை அணிந்து கோயிலை வளம்வந்து வழிபட்டனர்.

மாலையில் விரதமிருந்து காப்புகட்டிய பக்தர்கள் அம்மனை சுமந்தபடி வரசித்தி விநாயகர் கோயிலில் இருந்து மேளதாளங்கள், தாரதப்படைகள் முழங்க வாணவேடிக்கைகளுடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் இறங்கி தீமித்து அம்மனை வழிபட்டனர். இரவு பூங்கரகம், சிலம்பாட்டம், பொய்கால்குதிரை, கரகாட்டத்துடன் புஷ்ப விமான பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீநூக்காலம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவிற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : annual Theemithi festival ,Sri Nookalamman Temple ,Uthiramerur ,Uthiramerur-Endathur road ,Nangaiyarkulam ,
× RELATED திருப்பரங்குன்றம் சுல்தான்...