- ஆடிக்கிருத்திகை விழா
- திருட்டுணி முருகன்
- திருத்தணி
- திருட்டானி முருகன் கோயில்
- அஸ்வினி
- திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்
- முருகன் பகவான்
திருத்தணி, ஆக. 14: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா இன்று அஸ்வினியுடன் தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயிலில், ஆடிக்கிருத்திகை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி ஆடி அஸ்வினியுடன் இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் நாளை ஆடி பரணி, சனிக்கிழமை ஆடி கிருத்திகை நடைபெற உள்ளது. அன்று மாலை கோயில் மலை அடிவாரத்தில் சரவணப்பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்பத் திருவிழா தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்.
விழாவில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் திருத்தணி மலையில் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு, திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. திருக்கோயில் மற்றும் மலைப்பாதை, சரவணப் பொய்கை திருக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. இன்று அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை விழா தொடங்க உள்ள நிலையில் நேற்று பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள
வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் சரக டிஐஜி தேவராணி, மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், போலீஸ் எஸ்.பி.விவேகானந்தா சிக்லா ஆகியோர் மலைக்கோயில் மற்றும் சரவண பொய்கை திருக்குளம், தற்காலிக பேருந்து நிலையங்கள், முடி காணிக்கை செலுத்தும் நிலையங்கள், நல்லான்குளம், மேல் திருத்தணி வழியாக மலைக் கோயிலுக்கு செல்லும் படிகளில் செய்யப்ப ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மலைக் கோயிலில் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் பேரிகார்டுகள் அமைத்து வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யவும், காவடி மண்டபத்தில் பக்தர்கள் காவடிகள் செலுத்தி உற்சவரை தரிசிக்கவும், பாதுகாப்புக்காக கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, திருத்தணி ஏஎஸ்பி.ஷுபம் திவான், திருக்கோயில் இணை ஆணையர் ரமணி உட்பட பலர் உடனிருந்தனர்.
