பூந்தமல்லி, ஆக. 14: பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டு, லட்சுமி நகர் பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் சாலைகள் குண்டும்குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. கால்வாய் அமைக்கும் பணி முடிந்த பிறகு சாலை அமைக்கும் பணி நடைபெறும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் கால்வாய் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் அந்தப் பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் கால்வாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கால்வாய் மற்றும் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அந்தப் பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பெண்கள் லட்சுமிபுரம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நகராட்சி ஆணையர் சரவணகுமார், பொறியாளர் ஜெயக்குமார், நகர்மன்ற உறுப்பினர் தங்கம் திருமலை ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தேங்கியிருந்த மழைநீரை அகற்றவும், விரைந்து பணிகளை முடிக்கவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி உடனடியாக பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பூந்தமல்லி நகராட்சியில் பல இடங்களில் சாலை மற்றும் கால்வாய் பணிகள் நடைபெறவில்லை. இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் கூறுவதையும் அதிகாரிகள் மதிப்பதில்லை. இதனால் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
