புதுக்கோட்டை, ஆக.13: ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோபிநாத், குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று, கூட்டுறவுத்துறையில் முதுநிலை ஆய்வாளராக தேர்வானதையடுத்து, அவரை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். புக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த கல்லாலங்குடியைச் சேர்ந்த கோபிநாத், மாற்றுத்திறனாளி.
இவர், தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இவர், ஆறு மாத காலம் இடைவிடாமல் இரவு பகலாக படித்து கல்வியால் மட்டும் தான் நாம் வெளி உலகத்திற்கு வர முடியும் என்ற எண்ணத்தோடு குரூப் 2 தேர்வு எழுதி கூட்டுறவுத் துறையில் முதுநிலை ஆய்வாளர் பணியை பெற்றுள்ளார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் கோபிநாத்தை நேற்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சந்தித்து அவர் வைத்த கோரிக்கைகளான புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணியையும், அதேபோல், அவர் பணிக்கு சென்று வர பேட்டரி வீல் சேரையும் வழங்குவதாக உறுதியளித்து, குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்றதற்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
