மதுரை: ஒருவரின் மத வழிபாட்டில் மற்றொருவர் தலையிட முடியாது என திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை கோரியும், சிக்கந்தர் தர்காவுக்கு பல்வேறு வசதிகள் கோரியும், மலையை சமணர் குன்று என அறிவிக்கக்கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் இரு வேறு தீர்ப்புகளை அளித்தனர்.
நீதிபதி ஜெ.நிஷாபானு 6 மனுக்களையும் தள்ளுபடி செய்தும், நீதிபதி ஸ்ரீமதி, ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மனுக்களை ஏற்றுக்கொண்டார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து இந்த 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி எஸ்.விஜயகுமார் முன் இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி நடத்த அனுமதி உண்டா? நெல்லிதோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி இருக்கிறதா’’ என கேள்வி எழுப்பினார். மனுதாரர் ஒருவர் தரப்பில், ‘‘ஆடு, கோழி பலியிடுவதால் மலையின் புனிதம் கெட்டு தீட்டுப்படும்’’ என கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன், ‘‘தீட்டு என்பதே மனித குலத்திற்கு எதிரானது. தீட்டு என்பது சாதியிலோ, மதத்திலோ, உணவிலோ மனிதர்களுக்குள்ளாகவோ இருக்கக் கூடாது என்பது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. மிகவும் பிரபலமான அழகர்கோவிலில் பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு கிடா வெட்டிய பிறகு தான் பெருமாளை தரிசிக்க செல்கின்றனர். அவ்வாறு இருக்கும்போது எப்படி இது தீட்டாகும்? எனவே, தமிழ்நாடு அரசு தீட்டு என்ற சொல்லை எந்த விதத்திலும் அனுமதிக்காது’’ என்றார்.
மற்றொரு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கான வருவாய் துறை ஆவணங்கள் தாக்கல் செய்தார். மேலும் நெல்லிதோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தர்காவுக்கு உட்பட்ட பகுதியில் ஆடு, கோழி பலியிடுவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஒருவரின் மத வழிபாட்டில் மற்றொருவர் தலையிட முடியாது. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்ட நாடு எனக் கூறி வருவாய்த்துறை சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி, ஒன்றிய அரசு தொல்லியல் துறை தரப்பில் தனது வாதங்களை வைப்பதற்காக விசாரணையை நாளைக்கு (ஆக. 13) தள்ளி வைத்தார்.
