×

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்; இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன் நியமனமா..?

 

மும்பை: 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன.

லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10ம் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14ம் தேதி துபாயிலும், ஓமனை செப்.19ம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28ம் தேதி துபாயில் அரங்கேறுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய அவர் அதன்பின் இந்திய டி20 அணியில் இடம்பெறவில்லை. அந்த சூழலில் தற்போது ஏறக்குறைய ஒரு வருடங்கள் கழித்து மீண்டும் டி20 அணியில் தேர்வு செய்யப்பட உள்ளார். அத்துடன் இந்த தொடரில் அக்சர் படேலுக்கு பதிலாக இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாக அக்சர் படேலும் செயல்படுகின்றனர். இதில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (5 போட்டிகள்) சுப்மன் கில் தலைமையில் விளையாடிய இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு தொடரை சமன் செய்தது. அந்த தொடரில் கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டார். அதன் காரணமாக பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags : 17th Asian Cup Cricket ,MUMBAI ,17TH ASIAN CUP CRICKET SERIES ,UNITED ARAB EMIRATES ,D20 ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...