கூடலூர், ஆக. 11: கடந்த ஆக.1ம் தேதி கம்பம் மேற்கு வனச்சரக பகுதிக்கு உட்பட்ட இடங்களில் புலிகள் கணக்கெடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக நவீன தானியங்கி கேமராக்கள் வனத்துறையினரால் பொருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி சுரங்கனாறு பீட்டுக்கு உட்பட்ட காப்புக்காட்டு பகுதிகளில் இரும்பு பெட்டிகளில் பாதுகாப்பாக பொருத்தப்பட்டிருந்த நவீன கேமராக்களில் பதிவு செய்யக்கூடிய மெமரி கார்டு பதிவுகளை பெறுவதற்காக வனக் காப்பாளர் ரஞ்சித் தலைமையிலான வனக்குழுவினர் குழுவினர் வந்தனர். அப்போது, இரும்பு பெட்டிகள் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த கேமராக்கள் இரண்டு திருடப்பட்டிருந்தது.
இது குறித்து லோயர் கேம்பில் உள்ள குமுளி காவல் நிலையத்தில் வனத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் குமுளி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாயாண்டி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இதே வனசரக பகுதியில மான் வேட்டையாடப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது வனத்துறையினர் பொருத்தியுள்ள கேமராக்கள் திருடு போயுள்ள சம்பவம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவர்களும், மரக்கடத்தல்காரர்கள் நடமாட்டம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
