×

மூலப்பொருட்கள் விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிப்பு

தேவாரம், ஆக. 11: தேனி மாவட்டத்தில் கட்டுமான தொழிலின் மூலப் பொருட்களின் திடீர் விலை உயர்வால், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டிடம் கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், கம்பம், கூடலுார், சின்னமனூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கட்டிட பணிகள் நடக்கிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக, வீடுகள், வணிக வளாகம், பெரும் தொடர் வர்த்தக இடங்கள் கட்டுமானத்திற்கு, மணல், ஜல்லி, சிமெண்ட், கம்பி போன்றவை தேவைப்படுகிறது. கிரஷர் உற்பத்தி சார்ந்த கட்டுமான பொருட்களின் தொடர் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது. குறிப்பாக பல காரணிகளால் மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அதை தொடர்ந்து விலையேற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில்களில் கட்டுமான தொழிலும் ஒன்று என்பதால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனால் கடந்த மூன்று வருடங்களில், பெரும்பாலான சிறு குறு கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொறியாளர்கள் தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதேபோல் கட்டிட தொழிலும் முடங்கி உள்ளது. மேலும் கட்டுமான தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 வருடங்களில் மூலப்பொருட்கள் விலை 30 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் கட்டிட உரிமையாளர்கள் மட்டுமின்றி, வேலைவாய்ப்பு குறைவதால் கட்டிட தொழிலாளர்களும் கவலையில் உள்ளனர்.

Tags : Thevaram ,Theni district ,Uttampalayam ,Kombai ,Pannapuram ,Kambam ,Kudalur ,Chinnamanur… ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா