×

நண்பனின் தந்தை மண்டையை உடைத்த தொழிலாளி கைது

சேலம், ஆக.11: சேலம் அருகே மனைவியுடன் நண்பன் நெருங்கி பழகுவதாக ஏற்பட்ட சந்தேகத்தில் நடந்த தகராறில், அவரது தந்தையின் மண்டையை உடைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். சேலத்தை அடுத்த வீராணம் பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (45), கூலித்தொழிலாளி. இவரது மகன் விஷ்ணு, அதே பகுதியை சேர்ந்த தனது நண்பனான கொத்தனார் ஹரிஹரன் (26) என்பவருடன் வேலைக்கு சென்று வந்தார். அடிக்கடி நண்பன் ஹரிஹரன் வீட்டிற்கு விஷ்ணு சென்று வந்துள்ளார். அதில், அவரது மனைவியுடன் விஷ்ணுவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக, ஹரிஹரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவிக்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதில், மனைவி கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு, விஷ்ணுவின் வீட்டிற்கு ஹரிஹரன் சென்றுள்ளார். அங்கு தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து செல்ல, நண்பன் விஷ்ணு தான் காரணம் எனக்கூறி தகராறு செய்துள்ளார். அப்போது, சண்முகம் தட்டிக்கேட்டுள்ளார். அதில், உருட்டு கட்டையால் சண்முகத்தின் தலையில் அடித்து மண்டையை உடைத்தார். படுகாயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி வீராணம் எஸ்ஐ பாலன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, சண்முகத்ைத தாக்கிய ஹரிஹரன் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின், ஹரிஹரனை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Salem ,Shanmugam ,Veeranam Pallipatti ,Salem.… ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்