வேப்பனஹள்ளி, ஆக.11: வேப்பனஹள்ளியை ஒட்டியுள்ள கர்நாடக மாநில எல்லையோரத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள எப்ரி, சிங்கிரிப்பள்ளி, சிகரலப்பள்ளி, நேரலகிரி, கட்டாயபீடு, பதிமடுகு ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சுற்றித்திரியும் யானைகள், இரவு நேரங்களில் கிராமபுற வயல்வெளிகளில் புகுந்து, விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதுடன், குடிசை வீடுகளையும் தாக்கி வருகின்றன. இதனால் தினசரி விவசாயிகள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். கிராமப்பகுதிக்குள் வரும் யானைகளை வனத்துறையினர், கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டுகின்றனர். கர்நாடக மாநில எல்லையோரம் முழுவதும், கர்நாடக வனத்துறையினர் யானைகள் தங்கள் பகுதிக்குள் வராதவண்ணம் மின் வேலி அமைத்துள்ளனர்.
இதன் காரணமாக கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டப்படும் யானைகள், மீண்டும் தமிழக வனப்பகுதிக்கே திரும்பி விடுகின்றன. மேற்கண்ட கிராமங்கள் வழியாக மகராஜகடை, ஏக்கல்நத்தம் வரை தினமும் இடம்பெயர்ந்து வருகின்றன. அவ்வாறு இடம் பெயரும் போது, வழியில் உள்ள நிலங்களில் உள்ள பயிர்களை மிதித்து நாசம் செய்து விடுகின்றன. இதன் காரணமாக, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, கர்நாடக மாநில எல்லை முதல் மகராஜகடை வனப்பகுதி வரை, விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகாத வண்ணம் வேலி அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
