டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த குத்துச் சண்டை போட்டியின்போது, மூளையில் காயமடைந்த இரு வீரர்கள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜப்பானில் டோக்கியோ நகரின் கோரகுயென் ஹாலில் கடந்த 2ம் தேதி குத்துச் சண்டை போட்டிகள் நடந்தன. போட்டியில் பங்கேற்ற ஜப்பான் வீரர் ஷிகெடோஷி கொடாரி (28), ஓரியன்டல் பசிபிக் குத்துச் சண்டை கூட்டமைப்பு ஜூனியர் லைட்வெயிட் சாம்பியன் யமாடோ ஹடா உடன் மோதினார்.
12 சுற்றுகள் முடிந்த நிலையில் சிறிது நேரத்தில் அங்கேயே கொடாரி மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, மூளைக்கும் மண்டை ஒட்டுக்கும் இடையில் ரத்தம் கட்டியாகி நிற்கும் நிலை ஏற்பட்டால் செய்யப்படும் சப்டியுரல் ஹீமடோமா என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கொடாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே அரங்கில் நடந்த மற்றொரு போட்டியின்போது, மற்றொரு ஜப்பான் வீரர் ஹிரோமஸா உரகவா (28), யோஜி செய்டோ என்ற வீரருடன் மோதி, நாக்அவுட்டாகி விழுந்தார். அவருக்கும் மூளைப் பகுதியில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி செய்டோவும் உயிரிழந்தார். ஒரே அரங்கில் நடந்த இரு போட்டிகளில் பங்கேற்ற இரு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் ஜப்பான் குத்துச் சண்டை வட்டாரத்தில் பெரியளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
