ராயக்கோட்டை, ஆக.11: ராயக்கோட்டை பகுதி விவசாயிகள் தங்களின் மேட்டு நிலங்களில் மழையை நம்பி சாகுபடி செய்யும் நிலக்கடலை, சாமை, கொள்ளு, சோளம், கம்பு போன்றவற்றை விதைப்பர். இந்நிலையில் ஆடிப்பட்டத்தை எதிர்நோக்கி, ஆனி மாதம் பெய்த மழையின் ஈரத்தை வைத்து, நிலக்கடலையை சாகுபடி செய்தனர்.
பயிர்கள் முளைத்ததும், வெயில் வாட்டியதால் பயிர்கள் கருகத்தொடங்கின. சில செடிகள் வளராத நிலையில், பூ பூக்க செய்ததால், விளைச்சல் கொடுக்காது என விவசாயிகள் நம்பிக்கை இழந்தனர். இந்நிலையில் ஆடி மாதம் தொடங்கியதும், தொடர்ந்து பெய்த மழையால், கருகிய நிலக்கடலை செடிகள் செழிக்க தொடங்கியது. தற்போது அனைத்து செடிகளும் செழித்து வளர்ந்து பூக்கள் பூத்துள்ளது. இதனால் விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.
