அண்ணாநகர்: டி.பி.சத்திரம் ரவுடி கொலை வழக்கில் கைதான 4 பேர் கழிவறையில் வழுக்கி விழுந்து கை, கால்கள் முறிந்தது. சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ராஜ்குமார் (42). இவரை சில நாட்களுக்கு முன் 9 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் யுவனேஷ் (19) உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீசார் விசாரணைக்கு பிறகு அர்ஜூன், கணேஷ், கவுதம் மற்றும் இஸ்ரவேல் ஆகிய 4 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்தனர்.
இந்நிலையில், கழிவறையில் வழுக்கி விழுந்ததில் அர்ஜூன், ரேஸர் கணேஷ், கவுதம் மற்றும் இஸ்ரவேல் ஆகிய 4 பேருக்கும் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர்களை போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு 4 பேருக்கும் சிகிச்சை அளித்து கை, கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டது. சிகிச்சை முடிந்த பின்னர் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.
