×

கிட்னி விற்பனை மோசடி விவகாரம்; உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க மாநில அளவில் புதிய குழு: சுகாதாரத்துறைதிட்டம்

சென்னை: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்க மாநில அளவில் புதிய குழு அமைக்க சுகாதரத்துறை திட்டமிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் ஏழைகளை குறி வைத்து கிட்னி பறிப்பு குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக புகார் எழுந்தன. இது தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குனர் வினித் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை அறிக்கையினை அரசுக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 22ம் தேதி விசாரணை தொடங்கப்பட்டன. இந்த விசாரணையின்போது மீனாட்சி சுந்தரி, இணை இயக்குநர் (சட்டம்), மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், மாரிமுத்து, பெரம்பலூர் (ம) அரியலூர் இணை இயக்குநர் நலப்பணிகள் உள்ளிட்ட இதர மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த விசாரணையில் மனித உறுப்பு மாற்றுச் சட்டத்திற்கு முரணாக சான்றுகள் பெறப்பட்டு, சட்ட நுணுக்கங்களை தவறாகப் பயன்படுத்தி, சில இனங்களில் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என அறிக்கையில் திட்ட இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இதில் விசாரணையின் அடிப்படையில் அங்கீகாரக் குழுவிற்கு பரிந்துரைகள் வழங்கி, திட்ட இயக்குநர் அளித்த அறிக்கை விவரம்:

* திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ள பிரபல மருத்துவமனைகளிலிருந்து, அரசு அங்கீகார குழுவிற்கு பரிந்துரை செய்த ஆவணங்கள், தனியார் மருத்துவமனையின் ஒப்புதலோடு முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்றவாறு ஆவணங்களை தயார் செய்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த Transplant Coordinator மூலம் சில ஆவணங்கள் முறைகேடாக தயார் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வருகிறது. எனவே தனியார் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியினை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
* விசாரணை அறிக்கையில், இரு தரகர்கள் (ஆனந்தன் மற்றும் ஸ்டான்லி மோகன்) இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிகிறது. அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிய பரிந்துரை செய்யப்படுகிறது.
* தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் இயக்குநர் மூலம் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை அரசு கவனமாக பரிசீலனை செய்து, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
* திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஆகியவற்றின் மீது பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட உரிமத்தினை, ரத்து செய்ய, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் மட்டுமே நான்கு அங்கீகார குழுக்கள் உள்ளன. இதனை சீரமைத்து, மாவட்டக் குழுக்களின் பணிகளை மேற்பார்வை செய்யும் அதிகாரம் வழங்கி புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும், ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள நான்கு குழுக்களை மறுசீரமைப்பு செய்யவும் அரசால் உரிய ஆணைகள் வெளியிடப்படும்.
* மாவட்ட அளவிலான அங்கீகாரம் வழங்கும் குழுக்களின் பணி நடைமுறைகளை மேலும் சீராக்கவும், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள ஏற்பாளர்களுக்கும் மற்றும் கொடையாளிகளுக்கும் அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கும் குழுவால் அனுமதி வழங்குவதற்கு முன், தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் வழங்குவது குறித்த நிலையான இயக்க நடைமுறைகளை (Standard Operating Procedures) உருவாக்கி செயல்படுத்தவும் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Health Department ,Chennai ,Pallipalayam ,Namakkal district.… ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...