×

தனியார் பேருந்து சேவையையும் மின்மயமாக்கினால் 84,00,000 டன் கார்பன் உமிழ்வை தடுக்கலாம்

தனியார் பேருந்துகளின் சேவையை மின்மயமாக்கினால் 84 லட்சம் டன் கார்பன் உமிழ்வை தடுக்கலாம் என ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் மிக முக்கியமான காரணி கார்பன் உமிழ்வாகும். கார்பன் உமிழ்வு அதிகரிக்கும்போது காலநிலை மாற்ற விளைவுகள் அதிகரிக்கும். எனவே, கார்பன் உமிழ்வை குறைத்து நிகர பூஜ்ஜிய நிலையை அடைவது என்பது உலக நாடுகளின் முன் தற்போதுள்ள மிக முக்கிய சவாலாகும்.

உலகளவில் கார்பன் உமிழ்வில் இந்தியா 3வது இடம் வகிக்கிறது. அதனை 2070ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியமாக குறைப்பதற்கான முயற்சிகளின் பல மாநிலங்கள் முனைப்பு காட்டிவருகின்றன. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை கார்பன் உமிழ்வை தடுப்பதற்கான மின்மயாக்கலில் அரசு திறம்பட செயலாற்றி வருகிறது.சமீபத்தில் கூட 120 புதிய மின்சார பேருந்துகள் சென்னையில் முதற்கட்டமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் மூலமாக ஒரே மாதத்தில் ரூ.90 லட்சம் வரை இயக்க செலவு குறைக்கப்பட்டதுடன் 12.80 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர்.

இந்நிலையில், போக்குவரத்து மற்றும் வளர்ச்சி கொள்கைக்கான நிறுவனம் இந்திய பேருந்து – கார் உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாட்டின் தனியார் பேருந்து துறையை மின்மயமாக்குதல் என்ற தலைப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், மாநிலம் முழுவதும் இயக்கப்படும் 8500 தனியார் பேருந்துகளை மின்மயமாக்குவதன் மூலம், 48 லட்சம் பயணிகளை ஏற்றிச்செல்லும் இந்த பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகங்களுடன் போட்டியிட்டு 84 லட்சம் டன் கார்பன் உமிழ்வை தடுக்கலாம், கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு ஆண்டுக்கு ரூ.2.40 கோடி வீதம் 10 ஆண்டுகளில் ரூ.24,000 கோடி எரிபொருள் சேமிக்கப்படும் என்றும், பேருந்தின் இயக்க செலவில் 30 முதல் 40 சதவீதம் வரை குறைவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்து மற்றும் வளர்ச்சி கொள்கைக்கான நிறுவனத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் ஜெயராமன் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை – 2023ம் ஆண்டு அறிவித்த 2030க்குள் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் என்ற லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில் தனியார் பேருந்து சேவை மின்மயமாக்குவது என்பது மாநிலத்தின் நிலை தன்மை நோக்கங்களை அடைவதற்கான அவசியமாகும். அதன் முக்கியத்துவத்தை அறிந்து தான் இந்த ஆய்வில் 153 தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் கணக்கெடுப்பு நடத்தினோம். அவர்கள் மின்சார பேருந்துகளுக்கு மாறுவதற்கான விருப்பத்தினை தெரிவித்ததோடு, அதில் உள்ள தடைகளையும் எடுத்துரைத்தனர். குறிப்பாக, ஆரம்ப மூலதனம், சார்ஜிங் பிரச்னை, நிதியுதவி வாய்ப்புகள், கடுமையான விதிமுறைகள் ஆகியவை அடங்கும்.

காற்று மற்றும் சூரிய ஆற்றல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்றவற்றில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு தனியார் போக்குவரத்து மின்மயமாக்கல் மூலமாக சுகாதாரமான மற்றும் தூய்மையான போக்குவரத்திலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தலைமை வகிக்க முடியும். அதற்கு தேவையான நிதியுதவி, பொதுமான சார்ஜிங் கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
× RELATED திருவாரூர், தியாகராஜர் திருக்கோயில்