×

தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கம்: கமல்ஹாசன் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கைக்கு ம.நீ.ம. தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; வசதி படைத்தவர்களுக்குக் கிடைப்பதை விட தரமான கல்வி எளிய பின்புலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டுமெனும் நல்லெண்ணத்துடனும், மாறிவரும் உலகின் புதிய சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களுடன் நமது மாணவர்களை உருவாக்க வேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிறது. குறிப்பாக மாணவர்களை அச்சத்திலேயே ஆழ்த்தி வைக்கும் தேவையற்ற பொதுத்தேர்வுகள் நீக்கப்பட்டிருப்பதும், அநீதியான நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான அம்சங்கள் இடம்பிடித்திருப்பதும், இருமொழிக்கொள்கையே தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியவை.

அனைவருக்கும் தரமான கல்வி’ எனும் இலக்கோடு செயலாற்றி வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வடிவமைத்த டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் அவர்கள் தலைமையிலான குழுவினரையும் மனமாரப் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu government ,Kamal Haasan ,Chennai ,M.N.M. ,Tamil Nadu ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கு மலையாள நடிகர்...