×

நடுரோட்டில் ஓடஓட விரட்டி காதலனை தாக்கிய மாணவி

மாதவரம், ஆக.9:சென்னை அசோக்நகர் 19வது தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (21), கார்பெண்டர். இவர் நெசப்பாக்கத்தை சேர்ந்த 21 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவியை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த வாரம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ‘‘உனக்கும் எனக்கும் செட் ஆகாது. இந்த காதலை நாம் தொடர வேண்டாம்,’’ எனக்கூறிய சட்டக்கல்லூரி மாணவி, கார்த்திகேயனிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சட்டக்கல்லூரி மாணவி தனது தாய் மற்றும் தங்கையுடன் கே.கே.நகரில் உள்ள கோயிலுக்கு வந்துள்ளார். இதை அறிந்த கார்த்திகேயன், தனது காதலியை சமாதானம் செய்ய கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது காதலியை பார்த்து, ‘ஏன் என்னிடம் பேசுவதில்லை,’ என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.

அப்போது, தாய் உடன் இருந்ததால், ‘அதுபற்றி பிறகு பேசிக்கொள்ளலாம். இப்போது இங்கிருந்து செல்,’ என்று கூறியுள்ளார். ஆனால், கார்த்திகேயன் அங்கிருந்து செல்லாமல், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சட்டக்கல்லூரி மாணவி, சாலையோரம் கிடந்த கட்டையை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையில் நடுரோட்டில் துரத்தி துரத்தி கார்த்திகேயனை தாக்கியுள்ளார். இதில் கார்த்திகேயனுக்கு காயம் ஏற்பட்டது. சாலையில் சண்டை நடந்ததால், பொதுமக்கள் சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் காயமடைந்த கார்த்திகேயனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு இது எங்கள் காதல் விவகாரம், நான் புகார் அளிக்கவில்லை என கார்த்திகேயன் எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். இருந்தாலும் பொது இடத்தில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Madhavaram ,Karthikeyan ,19th Street, Ashoknagar, Chennai ,Nesappakkam ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...