×

காட்டுமன்னார்கோவில் பகுதியில் 4வது நாளாக வடியாத வெள்ளநீர்: 30 கிராம மக்கள் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில், டிச. 7: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு செங்கால் ஓடை வழியாக கடந்த 4 நாட்களாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 1500 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும் மண வாய்க்கால் வழியாக மழைத்தண்ணீர் வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் செல்வதால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் 35 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக இருக்கிறது. வீராணம் ஏரிக்கு தொடர்ந்து ஆயிரத்து 500 கனஅடிக்குமேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதிலிருந்து சென்னை குடிநீருக்காக  வினாடிக்கு 64கன அடி தண்ணீரும், லால்பேட்டையில் உள்ள வெள்ளியங்கால் வடிகால் ஓடை வழியாக வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீரும் சேத்தியாத்தோப்பு விஎன்எஸ் மதகு மூலம் விநாடிக்கு 150 கனஅடி தண்ணீரும்  அனுப்பப்படுகிறது. அதிகப்படியாக திறக்கப்படும் தண்ணீராலும் மேலும் வடிகால் ஓடையை முறையாக தூர்வாராத காரணத்தாலும் பல கிராம பகுதிகளுக்கு  செல்லும் தார் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : area ,Kattumannarkovil ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு