×

ஆலப்புழா அருகே தோண்ட தோண்ட எலும்புகள், மண்டை ஓடு சிக்கியது 3 பெண்கள் நகை, சொத்துக்காக கொன்று வீட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்டனரா? ரியல் எஸ்டேட் அதிபரை கைது செய்து விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள கடக்கரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பிந்து பத்மநாபன் (52). அருகிலுள்ள வாரநாடு பகுதியை சேர்ந்தவர் ஐஷா (57). இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர்கள் இருவரும் திடீரென மாயமானார்கள். இதுகுறித்து அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் பல வருடங்களாக விசாரணை நடத்தியும் எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது.

இதனால் இந்த வழக்குகள் குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் கோட்டயம் அருகே உள்ள ஏற்றுமானூர் பகுதியை சேர்ந்த ஜெய்னம்மா (65) என்ற பெண்ணும் சமீபத்தில் திடீரென மாயமானார். இதுகுறித்தும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பிந்து பத்மநாபன் மற்றும் ஐஷா ஆகியோருக்கு ஆலப்புழா அருகே உள்ள சேர்த்தலாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் செபஸ்டியன் (68) என்பவருடன் நிலம் விற்பனை தொடர்பாக பேசியது தெரியவந்தது. இதற்கிடையே எர்ணாகுளத்தில் பிந்துவுக்கு சொந்தமான நிலத்தை செபஸ்டியன் தன்னுடைய பெயருக்கு மாற்றி பின்னர் அந்த நிலத்தை ரூ. 1.3 கோடிக்கு விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் போலீசார் செபஸ்டியனை கைது செய்தனர். பிந்து பத்மநாபன், ஐஷா மற்றும் ஜெய்னம்மா ஆகியோர் காணாமல் போனதில் செபஸ்டியனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று குற்றப்பிரிவு போலீசார் சந்தேகித்தனர். சொத்து மற்றும் நகைக்காக இவர்களை கொலை செய்து அவருடைய வீட்டுத் தோட்டத்தில் புதைத்திருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செபஸ்டியனின் வீட்டுத் தோட்டத்தில் போலீசார் தோண்டினர். இதில் எலும்பு துண்டுகள் மற்றம் மண்டை ஓடு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன. இது போலீசுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த உடல் பாகங்கள் உடனடியாக தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

Tags : Alappuzha ,Thiruvananthapuram ,Bindu Padmanabhan ,Kadakarapalli ,Kerala ,Aisha ,Waranadu ,
× RELATED ரூ.6 கோடி போதை பொருள் கடத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி அதிரடி கைது