- Uthukkottai
- பென்னலூர்பேட்டை காவல் துறை
- நாகேஷ்வர ராவ்
- அத்திலவாக்கம்
- டிஎஸ்பி
- சாந்தி
- இன்ஸ்பெக்டர்
- தேவராஜ்
- பென்னலூர்பேட்டை
- சிறப்பு எஸ்.ஐ. வேலு
ஊத்துக்கோட்டை, ஆக.6: ஊத்துக்கோட்டை அருகே மாந்தோப்பில் காவலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே அதிலவாக்கம் கிராமத்தில் நாகேஷ்வரராவ் என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பில் கட்டிலில் படுத்தபடி ரத்த காயங்களுடன் காவலாளி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நேற்று முன்தினம் பென்னாலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி, இன்ஸ்பெக்டர் தேவராஜ், பென்னாலூர்பேட்டை சிறப்பு எஸ்ஐ வேலு மற்றும் போலீசார், தலையில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த காவலாளியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்தவர் ஆந்திர மாநிலம், காளஹஸ்தியைச் சேர்ந்த மணி (55) என்பதும், இவர், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதிலவாக்கம் கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி 2 மனைவிகள் உள்ள நிலையில், தற்போது 3வதாக மஞ்சுளா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவரது 3வது மனைவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிலவாக்கம் வந்து கணவரை பார்த்துவிட்டு, ஊருக்குச் சென்று விட்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கொலையான மணியுடன் யாரோ ஒரு மர்ம நபர், மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
அவர்தான், காவலாளி மணியை கொலை செய்து இருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார், மாந்தோப்பிற்கு வேலைக்கு வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். முன்னதாக, திருவள்ளூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி ஓடிச்சென்று நின்றது. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், காவலாளி கொலை நடந்ததற்கான காரணம் முன் விரோதமா அல்லது ஏதேனும் கள்ளத்தொடர்பு காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
