×

ரூ.28 கோடியில் கிளாம்பாக்கம் காவல் நிலையம், பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ரூ.28 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையம், பெரம்பூர்-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் பள்ளிக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 18.26 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூர், மார்க்கெட் தெருவிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9.74 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 17.65 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
கிளாம்பாக்கம் காவல் நிலையம்
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 18.26 கோடி ரூபாய் செலவில் 30,000 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இக்காவல் நிலையக் கட்டடம், காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் அறை, கட்டுபாட்டு அறை, கண்காணிப்பு அறை, கைதிகள் அறை, உணவருந்தும் அறை, ஆடவர் மற்றும் மகளிர் ஓய்வு அறை, பொது மக்கள் கலந்தாய்வு கூடம், காத்திருப்புக் கூடம், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இப்பேருந்து முனையத்தில் தினசரி 2500 பேருந்துகள் இயக்கப்பட்டு, சாதாரண நாட்களில் 50,000 பயணிகளும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சுமார் 2 லட்சம் பயணிகளும் பயன்படுத்துகின்றனர். பயணிகள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் பள்ளிக் கட்டடம்
பெரம்பூர், மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிங்கார சென்னை 2.0 மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், 9.74 கோடி ரூபாய் செலவில் 24,000 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளிக் கட்டடத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், கழிப்பறைகள் போன்றவற்றை பார்வையிட்டார். மேலும், வகுப்பறைக்கு நேரில் சென்று மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

இக்கூடுதல் பள்ளிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் 3 வகுப்பறைகள், ஆய்வகம், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக அறைகள், முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் தலா 6 வகுப்பறைகள் மற்றும் ஆய்வக அறை, மூன்றாம் தளத்தில் 3 வகுப்பறைகள், கலையரங்கம் ஆகியவற்றுடன் கூடிய இணைப்புக் கட்டடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள்
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கொளத்தூரில் 11.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 29,514 சதுர அடி கட்டட பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்படவுள்ள புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், பெரவள்ளூர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு பிரிவு, போக்குவரத்து காவல் பிரிவு, சைபர் குற்றப்பிரிவுக் கட்டடம்; கொளத்தூர், ரெட்டேரியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிட வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்;

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 3.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6-வது மண்டலம், 70-வது வார்டு, பில்கிங்டன் சாலையில் அமைந்துள்ள இரயில்வே ஆன்ஸ்லே வாய்க்கால் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மற்றும் மண்டலம்-6ல், 1 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 69வது வார்டு, ரங்கசாமி தெரு மற்றும் லோகோ ஸ்கீம் 1-வது பிரதான சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானங்கள் மற்றும் வார்டு-64, 65, 67, 69 ஆகியவற்றில் உள்ள ஒன்பது பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள்; என மொத்தம் 17 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூரில் தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் சேதமடைந்த இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக பாதிக்கப்பட்ட மூன்று நபர்களுக்கு புதிய இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ்குமார், காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக், இ.கா.ப.,

சென்னை மாநகர காவல் ஆணையர் ஆ.அருண், இ.கா.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன், இ.ஆ.ப., தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Glampakkam Police Station ,Perampur Women's Secondary School ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Klampakkam Police Station ,Perampur-Chennai Women's Secondary School ,Mu. K. Stalin ,Kolathur ,Klampakkam Artist Century Bus Terminal ,Chennai Metropolitan Development Group ,Greater Chennai Municipality ,Chennai Girls Secondary School ,Market Street ,Perampur ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...