×

சாத்தான்குளம் கொலை வழக்கில் அப்ரூவராக இன்ஸ்பெக்டர் தர் மனு தள்ளுபடி

 

மதுரை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020ல் போலீசார் விசாரணையின்போது தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைதாகி மதுரை சிறையில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் தர், அப்ரூவராக மாறி அரசு தரப்புக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்க தயாராக இருப்பதாக மனு செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, அப்ரூவர் ஆவதற்கு சரியான காரணங்களை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, 7 பக்க பதில் மனுவை இன்ஸ்பெக்டர் தர் தாக்கல் செய்திருந்தார்.

சிபிஐ தரப்பில், ‘‘ஏற்கனவே பல நேரடி சாட்சிகள் உள்ளன. மனுதாரர் இதுவரை 52 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்துள்ளார். இந்நிலையில் இவரது மனுவை ஏற்க கூடாது’’ என வாதிடப்பட்டது. ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில், சம்பவம் நடந்தபோது காவல் நிலையத்திலேயே தான் இல்லை என கூறும் மனுதாரரால் எவ்வாறு நடந்த உண்மைகளை கூற முடியும். மனுவை ஏற்கக் கூடாது என வாதிடப்பட்டது. இதையடுத்து, 17 பக்க மனுவை படித்து பார்த்து உரிய முடிவெடுப்பதாகக் கூறி விசாரணையை நீதிபதி தள்ளி வைத்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.முத்துக்குமரன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்ரூவராகும் இன்ஸ்பெக்டர் தரின் மனுவில் எந்த முகாந்திரமோ, முன்னுரிமையோ இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags : Inspector ,dhar ,Sathankulam ,Madurai ,Jayaraj ,Thoothukudi district ,Pennix ,SIs ,Balakrishnan ,Raghuganesh ,Madurai First District Additional District Court ,
× RELATED ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம்6...