×

புதிய கல்விக்கொள்கை மூலம் மும்மொழிக்கல்வியை கொண்டு வந்து தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் புகுத்த பார்க்கிறார்கள்: ஒன்றிய அரசு மீது அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு

நாகர்கோவில்: புதிய கல்விக்கொள்கை மூலம் மும்மொழிக்கல்வியை கொண்டு வந்து எப்படியாவது தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் புகுத்த பார்க்கிறார்கள் என்று ஒன்றிய அரசு மீது அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரியில் நேற்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தேசிய கல்விக்கொள்கையில் நமக்கு பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நிதியை நிறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? எனவே தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய 60 சதவீதம் ரூ.2,152 கோடியை ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளார். பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் சென்று சேருகின்றவர்கள் எண்ணிக்கை ஒன்றிய அரசின் இலக்கு 2030ல் 50 சதவீதத்தை தாண்ட வேண்டும் என்பதுதான்.

நாம் இதனை 2 வருடத்திற்கு முன்பே தாண்டிவிட்டோம். இதற்கு யார் காரணம் கலைஞர் வடிவமைத்த அடித்தளம்தான். நிதி கொடுக்காமலும் சிறப்பாக செயல்படுகின்றனரே, தர வரிசையில் 150 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது, கல்வியில் விழிப்புணர்வுடன் உள்ளனர். எப்படி சொல்லி நிதியை நிறுத்தலாம்? என்று தேசிய கல்விக்கொள்கையில் சேருங்கள் என்று பணத்தை நிறுத்தியுள்ளனர். நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்றால் எங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். கருத்துகளை தவிர்த்துவிட்டு அரசியல் செய்வதைமட்டும் வைத்து கல்வியில் நீங்கள் கை வைக்காதீர்கள்.

புதிய கல்விக்கொள்கை மூலம் மும்மொழிக்கல்வியை கொண்டுவந்து எப்படியாவது தமிழ்நாட்டில் சமஸ்கிருதம், இந்தியை புகுத்த பார்க்கிறார்கள். சமஸ்கிருதத்திற்கும், இந்திக்கும் அதிக நிதி ஒதுக்குகின்றனர். மற்ற மொழிகளுக்கு குறைவாக நிதி ஒதுக்குகின்றனர். இதில் இருந்து அவர்களின் பாகுபாட்டை பார்க்க முடிகிறது. அதற்கு ஆரம்பம் முதலே சொல்லிக்கொண்டு இருக்கிறோம், தமிழ்நாட்டின் அடிப்படை வரலாற்றை தெரிந்துகொள்ளுங்கள். இங்கு மொழியில் கை வைத்தால் தேன் கூட்டில் கைவைப்பது போன்றது என்று கூறியுள்ளோம். அதனை மீறி வேண்டுமென்று வம்பிழுப்பது போல செய்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* 1.27 கோடி மாணவர்களின்
எதிர்காலத்தில் கைவைப்பதா?
அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டியில், ‘எல்லா கட்சியை சேர்ந்தவர்களின் பிள்ளைகளும், எல்லா போர்டிலும் படிக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இங்கு 1 கோடியே 27 லட்சம் மாணவர்கள் எல்லா வாரியத்திலும் படிக்கின்றனர். இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்னை. மாணவர்களின் எதிர்காலத்தில் கை வைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்யக்கூடாது. மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து நாங்கள் கேட்கிறோம். கட்சி சார்பு இல்லாமல் ஒன்று சேர்ந்து கேட்கிறோம். ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்பதை மக்களை புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

* ‘காபி வித் கல்வி அமைச்சர்’ நாகர்கோவிலில் தொடக்கம்
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நாகர்கோவில் புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் முதன்முதலாக ‘காபி வித் கல்வி அமைச்சர்’ நிகழ்ச்சி தொடக்கவிழா நேற்று நடந்தது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை வகித்தார். குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘இளைய சமுதாயத்திற்கு ஒட்டுமொத்த எடுத்துக்காட்டாக விளையாட்டுப் போட்டிகளாக இருந்தாலும் சரி, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒவ்வொரு திட்டங்களாக இருந்தாலும் சரி ,அதனை ஆய்வு செய்யும் பொறுப்பு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றால் அது விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே தான் அவரை விளையாட்டுத் துறை அமைச்சராக மட்டும் சொல்லாதீர்கள், துணை முதலமைச்சர் என்ற நிலையில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்று நாங்கள் சொல்வதற்கு காரணம் ஆகும். அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து நிதியை ஒதுக்கீடு செய்து தருபவர் அவர்தான். வருங்கால சமுதாயத்தை வளர்க்கக்கூடிய மிகப் பெரிய பொறுப்பு அவருக்கு உண்டு’ என்றார்.

The post புதிய கல்விக்கொள்கை மூலம் மும்மொழிக்கல்வியை கொண்டு வந்து தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் புகுத்த பார்க்கிறார்கள்: ஒன்றிய அரசு மீது அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Anbil Mahesh ,Union government ,Nagercoil ,Kanyakumari ,School ,Education ,Anpil Mahesh ,Minister Anpil Mahesh ,
× RELATED ஒன்றிய அரசு முரண்பட்ட கல்வியை புகுத்த...