இந்த உதவித்தொகை உயர்வு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். இதன்மூலம் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.845.91 கோடி செலவாகும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களால் தமிழ்நாட்டில் 30 லட்சத்து 55 ஆயிரத்து 857 பேர் பேர் பயன்பெறுகின்றனர். இதுதவிர 74 லட்சத்து 73 பேர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் கொடுத்து காத்திருக்கின்றனர். இதில் தமிழ்நாடு அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை என்பது மிகவும் முக்கியமானது. இந்த திட்டம் பல்வேறு நிலைகளை கடந்து புதிய வடிவம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களின் துயரத்தை நீக்கும் வகையில் உதவித்தொகை வழங்கும் திட்டம் 1.4.1962ல் கொண்டு வரப்பட்டது. கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்ட போது முதியோருக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.20 வழங்கப்பட்டது. அதன்பிறகு ரூ.35, ரூ.50, ரூ.75, ரூ.100, ரூ.150, ரூ.200 என்று வழங்கப்பட்ட உதவித்தொகை கலைஞர் ஆட்சிக்காலத்தில்தான் ரூ.500 ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு அதிமுக ஆட்சி காலத்தில் இந்த தொகை ரூ.1000 என்று உயர்த்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் 1.25 லட்சம் பேர் பெற்றுக் கொண்டிருந்த முதியோர் உதவித்தொகை 70 ஆயிரம் பேருக்கு ரத்து செய்யப்பட்டது. இதனால் துடித்து மாண்ட உயிர்களும் ஏராளம்.
இது ஒருபுறமிருக்க, தற்போது பாகுபாடு பார்க்காமல் முதியோர் உதவித்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. மேலும் அதற்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. இதுதான் அரசியல் கலக்காத அரசு திட்டத்தின் தனிச்சிறப்பு. தள்ளாத வயதில் தட்டுத்தடுமாறும் முதியோர், மனதில் இலக்குகள் இருந்தாலும் அதை எட்டுவதற்கு சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள், மணம் முடித்து மணக்காத வாழ்வில் சிக்கித்தவிக்கும் விதவைகள் என்று சமூகத்தில் சிரமங்களை எதிர்கொண்டு வாழும் எளிய மக்கள் ஏராளம். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் உயர்த்தி அறிவித்துள்ள உதவித்தொகை வாழ்வில் புது நம்பிக்கையூட்டும் என்றால் அது மிகையல்ல.
The post புது நம்பிக்கையூட்டும்… appeared first on Dinakaran.