புதிய ஐடி மசோதாவில் உள்ள டிஜிட்டல், சமூக ஊடக கணக்கை ஊடுருவும் அதிகாரம் புதிது அல்ல: வருமான வரித்துறை விளக்கம்

புதுடெல்லி: சுமார் 60 ஆண்டுகள் பழமையான வருமான வரி சட்டத்திற்கு பதிலாக எளிமையான புதிய ஐடி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய ஐடி மசோதாவில் பிரிவு 247ல், வருமான வரித்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. எந்த வாரண்டும் இல்லாமல், வரி செலுத்துவோரின் இமெயில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகள், கிளவுட் சேமிப்பகங்களை பாஸ்வேர்டு இல்லாமலேயே அணுகக் கூடிய அதிகாரம் வருமான வரித்துறைக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கு பல தரப்பினரும் கவலை தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்துள்ள விளக்கம்: இதுபோன்ற செய்திகள் பயத்தை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றும் இல்லை. வரி செலுத்துவோரின் சமூக ஊடக கணக்குகள் அல்லது ஆன்லைன் செயல்பாடுகளை வரித்துறை கண்காணிப்பதில்லை. இந்த அதிகாரங்கள் ரெய்டு அல்லது ஆய்வின் போது மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். அதுகூட ரெய்டுக்கு ஆளான நபர் டிஜிட்டல் ஆவணங்களின் பாஸ்வேர்டை பகிர மறுக்கும் சமயத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.

இந்த அதிகார ஐடி சட்டத்தில் புதிதான ஒன்றல்ல. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தில் பிரிவு 132ல் மின்னணு பதிவு ஆவணங்களை ஆய்வு செய்யும் அதிகாரம் ஐடி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சாமானிய வரி செலுத்துவோருக்கு எதிராக பயன்படுத்தப்படாது. வரி எய்ப்பு செய்பவர்கள், மோசடியில் ஈடுபடுபவர்கள் இப்போது அதிகளவில் டிஜிட்டல் ஆவணங்களாக சேமிக்கின்றனர். இதை அணுகுவதன் மூலம் மட்டுமே மோசடிகளை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். உண்மையான மோசடியை கணக்கிட முடியும். எனவே, டிஜிட்டல் ஆவணங்களை அணுகும் அதிகாரம் அவசியமானது. இல்லாவிட்டால், வரி ஏய்ப்பவர்கள் தண்டனையின்றி தப்பிக்க வழிவகுக்கும். இவ்வாறு கூறி உள்ளனர்.

The post புதிய ஐடி மசோதாவில் உள்ள டிஜிட்டல், சமூக ஊடக கணக்கை ஊடுருவும் அதிகாரம் புதிது அல்ல: வருமான வரித்துறை விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: