×

என்டிஏ கூட்டணி, முதல்வர் வேட்பாளர் மாற்றமா?: அதிமுக மாஜி அமைச்சர், பாஜ தலைவர், டிடிவி பரபரப்பு

புதுக்கோட்டையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்த வரை தமிழ்நாட்டின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இது தேசிய தலைமையால் எடுக்கப்பட்ட முடிவு. தமிழகத்தில் பிரிகேடியர், கட்டளை தளபதி எடப்பாடி பழனிசாமி தான். முடிவுகளை எடப்பாடி பழனிசாமி தான் அறிவிக்க வேண்டும், தெரிவிக்க வேண்டும். அவரது கருத்து இறுதி கருத்து. தவெக கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். கூட்டணி ஆட்சி உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி சொல்வதுதான் இறுதிக்கருத்து. அவர் சொல்வதுதான் எங்களுக்கு கட்டளை. அதிமுக ஒன்றாகத்தான் இருக்கிறது. டிடிவி. தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் குறித்த முடிவை எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார்.

சரியான முடிவுகளை, சரியான நேரத்தில் எடப்பாடி அறிவிப்பார். பலமான கூட்டணி அதிமுக -பாஜ கூட்டணி. பாமகவில் பிளவுபட்டவர்களை இணைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபடாது. அதை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். தேர்தல் அறிவிப்புக்கு 10 நாட்களுக்கு முன்பும், 10 நாட்களுக்கு பிறகும் கூட கூட்டணி மாறி இருக்கும் கதை தமிழ்நாட்டில் நடந்துள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றதால் வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் பின்னடைவு ஏற்படக்கூடிய வாய்ப்பு கண்ணுக்ெகட்டிய தூரம் வரை தெரியவில்லை.
இவ்வாறு கூறினார்.

நெல்லையில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: நாங்கள் முருக பக்தர்கள் மாநாடு தான் நடத்தினோம். வாக்கு கேட்கவில்லை. முழுக்க முழுக்க அது ஒரு பக்தர் மாநாடுதான். முருகருடைய பக்தியை நடத்திக் காட்டியுள்ளோம். நாங்கள் ஓட்டுப் போடுங்கள் என கேட்கவில்லை. தேர்தலை பயன்படுத்தி மக்களை குழப்பவில்லை. முருகர் மாநாட்டை இந்து முன்னணி நடத்தினார்கள். நாங்கள் கலந்து கொண்டோம். திருச்செந்தூர் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு என்ன நடக்கும்? என தெரியும். இவ்வாறு கூறினார். 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று அமித்ஷா கூறி உள்ளார். அதற்கு அதிமுக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனரே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு நயினர், ‘தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா என்பதை அமித்ஷாவும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசிக் கொள்வார்கள்’ என்றார்.

கூட்டணி ஆட்சியின்போது முதலமைச்சர் யார்? என்பது குறித்து அமித்ஷா பேசிய போது எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லவில்லையே? என்று கேட்டதற்கு, ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்று ஏற்கனவே அமித்ஷா சொல்லிவிட்டார். இன்று பேசுவதை சொல்லக்கூடாது. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்’ என்று நயினார் தெரிவித்தார்.
விஜய் கூட்டணிக்கு வருவாரா? என்ற கேள்விக்கு, ‘நல்லதே நடக்கும்’ என்று நயினார்
கூறினார்.

திருச்சியில் அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம் தான். உட்கட்சி பிரச்னைகளில் தலையிட மாட்டேன் என அமித்ஷா கூறுவது சரியானது தான். ஓபிஎஸ் தேஜ கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். இதை நயினார் நாகேந்திரன் உறுதிப்படுத்தி உள்ளார். அதிமுகவில் அவர் இணைவது அவர்களுக்குள் உள்ள பிரச்னை. தமிழ்நாட்டில் தேஜ கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. இதை அமித்ஷா உறுதிப்படுத்தி உள்ளார். முதல்வர் வேட்பாளர் குறித்து அமித்ஷா தெளிவாக கூறி உள்ளார். தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு குறித்து தெரிவிப்போம். பாமக, தேமுதிக தேஜ கூட்டணியில் இணையுமா என்ற ஜோசியமெல்லாம் எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.அமமுக சார்பில் துணை முதல்வர் வேட்பாளர் வருவாரா என்ற கேள்விக்கு இப்போது தான் கூட்டணி பலப்படுத்தப்பட்டு வருகிறது என்றார். திருச்சியில் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, போட்டியிட்டால் நிச்சயம் கூறுவேன் என்றார்.

 

The post என்டிஏ கூட்டணி, முதல்வர் வேட்பாளர் மாற்றமா?: அதிமுக மாஜி அமைச்சர், பாஜ தலைவர், டிடிவி பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : NDA alliance ,AIADMK ,minister ,BJP ,TTV ,Rajendra Balaji ,Pudukkottai ,National Democratic Alliance ,Tamil Nadu ,Edappadi Palaniswami ,Brigadier ,NDA ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...