நாகூர் தர்காவில் 14ம் தேதி கந்தூரி விழா துவக்கம்: வர்ணம் பூசும் பணி தீவிரம்

நாகை: நாகூர் தர்காவில் வரும் 14ம் தேதி கந்தூரி விழா துவங்குகிறது. இதையொட்டி தர்காவில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நாகை மாவட்டம் நாகூரில் ஹஜ்ரத் யைது அப்துல் காதிர் ஷாஹூல் ஹமீது பாதுஷா என அழைக்கப்படும் ஆண்டவர் தர்கா உள்ளது. மிக பிரசித்தி பெற்ற இந்த தர்காவில் கந்தூரி விழா ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த விழாவில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் வருகை தருவர்.

இந்தாண்டு நாகூர் ஆண்டவர் தர்காவின் 467வது கந்தூரி விழா வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி 10ம் தேதி அதிகாலை பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி அதிகாலை போர்வை மாற்றுதல், மாலையில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 16ம் தேதி காலை முதல் சந்தனகட்டை அரைக்கும் நிகழ்ச்சி, 21ம் தேதி இரவு வாணவேடிக்கை, 22ம் தேதி இரவு கடற்கரையில் பீர் வைக்கும் நிகழ்ச்சி, 23ம் தேதி காலை சந்தனம் பிழிதல், அன்றிரவு தஞ்சை அரண்மனை போர்வை போற்றுதல் மற்றும் தங்கப்போர்வை போற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

23ம் தேதி இரவு சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று 24ம் தேதி அதிகாலை ஆண்டவருக்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 25ம் தேதி மாலை பீர் கடற்கரை ஏறுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 27ம் தேதி இரவு கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. கந்தூரி விழாவையொட்டி நாகூர் தர்காவில் வர்ணம் பூசி அழகுப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. தர்காவில் அலங்காரவாசல் துவங்கி அனைத்து இடங்களிலும் சாரம் கட்டி வர்ணம் பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post நாகூர் தர்காவில் 14ம் தேதி கந்தூரி விழா துவக்கம்: வர்ணம் பூசும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: