நாகை: நாகை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் திடீரென்று கொட்டிய கனமழைக்கு சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். நாகை மாவட்டத்தில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்திருக்கிறார்கள். கீழ் வேலூரை அடுத்த வெண்மணி, கடலாக்குடி, திருபஞ்சனம், பிச்சமங்கம், அன்னக்குடி, கிள்ளுக்குடி, ஐயடிமங்கலம், காரியமங்கலம், மோகளூர், செம்பகபுரம், பரப்பனூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்திருக்கிறார்கள்.
போதுமான தண்ணீர் இல்லாததால் பலர் வெகுதூரத்தில் இருந்து எஞ்சின் மூலமாக தண்ணீர் கொண்டுவந்து குறுவை பயிர்களை பாதுகாத்தனர். இந்நிலையில் அறுவடைக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழையால் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கனமழையால் சாய்ந்தது. விவசாயிகளை வேதனையில் இது ஆழ்த்தியிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
The post நாகை அருகே திடீரென்று கொட்டிய கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன..விவசாயிகள் வேதனை..!! appeared first on Dinakaran.