சென்னை: முருகன் வேலை கையில் எடுத்துக்கொண்டு சுற்றிய பாஜவினருக்கு கிடைத்தது பூஜ்யம்தான் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலை, ராஜா தோட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய குடியிருப்புகளின் இறுதிக்கட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் கொளத்தூர் பெரியார் நகர் மற்றும் ஜவகர் நகர் பொது நூலகத்தில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் ‘முதல்வர் படைப்பகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: ஜவகர் நகர் நூலகத்தை புதுப்பித்து புதிதாக கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பகம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 9 இடங்களில் இதுபோன்ற முதல்வர் படைப்பகங்களை கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம். இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் முதல்வர் படைப்பகங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தென் சென்னையிலும் ஆறு இடங்களில் முதல்வர் படைப்பகம் கொண்டு வர திட்டமிடப்பட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது.
இது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். முதல்வர் படைப்பகத்தில் பயின்று வந்த 6 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? யோகி ஆதித்யநாத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம்?. இனத்தால், மதத்தால், மொழியால் பிளவுபடுத்தும் மாநாட்டை நடத்துகிறார்கள். ஏற்கனவே பாஜவினர் வேலை கையில் எடுத்துக்கொண்டு சுற்றினார்கள். அதில் கிடைத்தது பூஜ்யம் தான். திருப்பரங்குன்றத்திற்கு சென்றபோது மாநாட்டுக்கான நோட்டீஸ் கொடுத்தார்கள். முருகன் படம் அதில் இருந்ததால் நான் பெற்றுக் கொண்டேன்.
ஏடிஎம் குடிநீர் வடசென்னை பகுதியில் சரியாக செயல்படவில்லை என்றனர். அது சரிசெய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். அம்மா குடிநீரை அவர்கள் எந்த இடத்தில் தொடங்கி அதை நாங்கள் எடுத்து விட்டோம் என்று அவர்கள் சுட்டிக் காட்டினால் பதில் சொல்கிறோம். இந்த கூட்டணி உறுதிமிக்க கப்பல். இந்த கப்பலின் மாலுமியான முதலமைச்சர் புயல் பூகம்பங்களை எல்லாம் சம்பாதித்து கப்பலை செலுத்தி வருகிறார். 2026லும் கடல் முரணாக இருந்தாலும் அரணக மாற்றி இந்த ஆட்சியை தொடர்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
The post முருகன் வேலை கையில் எடுத்து சுற்றிய பாஜவினருக்கு கிடைத்தது பூஜ்யம்தான்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.
