சித்தர்கள் குண்டலினி எனும் யோக சக்தியைப் பாம்பு வடிவமாகக் கொள்வர். அது மனிதனின் உடலில் இடுப்பின் கீழ்ரோமப் பகுதியில் சுருண்டு தூங்கும் நிலையில் உள்ளதென்பர். அதனை விழிப்புறச் செய்து ஆறாதாரங்களைக் கடப்பதே யோகநெறி எனப்படும். மூச்சுக்காற்றை கட்டுப்படுத்தி குண்டலினியைக் கனல்மூட்டி அதனை எழுப்புவதே யோகக்கலையின் முதற்படியாகும். இவ்வகையில் முருகன் இறைவனின் கண்ணில் இருந்து ஞானமயமாக வெளிப்பட்டு, தீக்கடவுளால் ஏந்தப்பெற்றுக் காற்றுக் கடவுளால் சரவணப் பொய்கையில் விடப்பட்டு ஆறு வடிவம் கொண்டு எழுந்து நின்றான். அதன் தத்துவம் குருவின் ஞானத்தால் காற்றுப் பயிற்சியாகச் சொல்லப்பட்டு முருகன் எனும் ஞானத்தீயாய்க் குண்டலினி எழும்புவதாகும். இதை உணர்த்துவதே நாக வாகனமாகும். இக்காட்சியில் நாகம் சுருண்டு படத்தை மட்டும் விரித்துள்ளது. அதன் நடுவில் முருகன் விளங்குகின்றான். தூங்கும் யோக சக்தியான குண்டலினி படம் விரித்து எழும்பத் தொடங்குவதையும், அதனை எழுப்பும் சக்தியாக முருகனும் காட்டப்படுகின்றனர். குண்டலினியை எழுப்பும் ஆதாரசக்தியாக விளங்குவதால், முருகன், யோகசாமி எனவும், சித்தன் எனவும் அழைக்கப்படுகின்றான்.
The post நாக வாகனத்தில் யோக சித்தராக முருகன் appeared first on Dinakaran.