×

12 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு; ராஜ்யசபாவில் பெரும்பான்மையை தொட்டது பாஜக கூட்டணி: காங்கிரஸ் கூட்டணியின் பலம் 85 ஆக உயர்வு

புதுடெல்லி: இடைத்தேர்தலில் 12 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் ராஜ்யசபாவில் பெரும்பான்மையை பாஜக கூட்டணி தொட்டது. காங்கிரஸ் கூட்டணியின் பலம் 85 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஒன்பது மாநிலங்களில் இருந்து காலியாக உள்ள 12 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் வரும் செப்டம்பர் 3ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், போட்டி வேட்பாளர்கள் இல்லாததால் 12 இடங்களுக்கும் குறிப்பிட்ட கட்சிகளின் சார்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி பாஜகவில் 9 பேர், அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தலா ஒன்று என்று 11 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். தெலுங்கானாவில் ஒரு இடத்தை காங்கிரஸ் கைப்பற்றியது.

அவர்களில் ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரங்கள், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், அசாம் மாநிலத்தில் இருந்து ரஞ்சன் தாஸ் மற்றும் ராமேஷ்வர் டெலி, பீகாரில் இருந்து மனன் குமார் மிஸ்ரா, அரியானாவில் இருந்து கிரண் சவுத்ரி, மகாராஷ்டிராவில் இருந்து திரியா ஷீல் பாட்டீல், ஒடிசாவிலிருந்து மம்தா மோகந்தா, ராஜஸ்தானில் இருந்து ரவ்னீத் சிங் பிட்டு மற்றும் திரிபுராவில் இருந்து ராஜீவ் பட்டாச்சார்ஜி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தெலங்கானாவில் இருந்து காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாராஷ்டிராவில் இருந்து அஜித் பவார் அணியின் நிதின் பாட்டீலும், பீகாரில் இருந்து ஆர்எல்எம் கட்சியின் உபதேந்திர குஷ்வாஹாவும் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் ராஜ்யசபாவில் ெமாத்தம் 245 இடங்கள் உள்ளன. இருப்பினும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து நான்கு மற்றும் நியமன உறுப்பினர்களுக்கான நான்கு இடங்கள் என மொத்தம் எட்டு இடங்கள் காலியாக உள்ளன. தற்போதுள்ள 237 உறுப்பினர்களில் பாஜகவுக்கு மட்டும் 96 பேர் உள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பார்க்கும் போது, மொத்த எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6 நியமன உறுப்பினர்கள், ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவு ஆளும் பாஜக கூட்டணிக்கு உள்ளது. அதனால் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் (119) கிடைத்துள்ளது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 85 ஆக உள்ளது. மீதமுள்ள உறுப்பினர்கள் பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

The post 12 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு; ராஜ்யசபாவில் பெரும்பான்மையை தொட்டது பாஜக கூட்டணி: காங்கிரஸ் கூட்டணியின் பலம் 85 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajya Sabha ,Congress ,New Delhi ,BJP alliance ,CONGRESSIONAL COALITION ,Rajya ,Sabha ,Dinakaran ,
× RELATED கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த நிலையில்...