×
Saravana Stores

மோகத்தைக் கொன்றுவிடு!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 47

(பகவத்கீதை உரை)

ஆவ்ருதம் ஞானமேதேன ஞானினோ நித்ய வைரிணா காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணானலேனச(3:39)‘‘ஒரு ஞானியின் நிரந்தர எதிரி, ஆசை. அது முழுமையாகத் திருப்திபடுத்த முடியாத விபரீதம். ஆசைக்கு எதுவுமே விலக்கல்ல. அது எங்கும் பாயும், எப்போதும் பாயும், யாரிடத்தும் பாயும். எப்படியும் பாயும். இப்படி ஏகோபித்த குணாதிசயம் கொண்ட ஆசை, ஞானத்தை முழுமையாக மறைக்கிறது, அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது, மீள முடியாமல் அமிழ்த்தி வைத்திருக்கிறது.’’ ‘ஆசைக்கோர் அளவில்லை’ என்பார்கள்.

அதற்கு இன்ன விஷயம் என்றுதான் இல்லை, எல்லாவற்றிலும் தீயாய்ப் பாயக்கூடியது. பற்றி எரியும் நெருப்புக்கு, திசை தெரியாது. தான் தீண்டும் எதையும், அது எத்தகைய பொருளாக இருந்தாலும் சரி, பொசுக்கிவிடக்கூடிய வெறிவேகம் கொண்டது. அதை எப்படித் தணிப்பது? எதனால் தணிப்பது? தணிப்பது இயலுமா அல்லது தணிக்க முயற்சிப்போரையும் அது பாதிக்குமா? இதுதான் தீவினையின் வேகம், ஆழம், விஸ்தீரணம்.

காமத்தை ருசித்த துளசிதாசர், அந்த இன்பத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்தார். மனைவி, பிறந்த வீட்டிற்குச் சென்றுவிட்டாள். அவருக்கு அவள் வேண்டும். அவள் தன் மோகத்தைப் புரிந்துகொண்டு தன்னிடம் வருவாள் என்று எதிர்பார்க்க முடியாது. பிறந்த வீட்டுச் சம்பிரதாயக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு அவளால் அப்படி உடனே வந்துவிட முடியாது. சரி, தாமே போவோம் என்று மோகத்தீ மனசுக்குள் வியாபிக்க, அவர் புறப்பட்டுவிடுகிறார். வழியில் ஓர் ஆற்றைக் கடக்கவேண்டும். அதில் மிதந்தபடி போய்க்கொண்டிருந்த ஒரு மரக்கட்டையைப் பற்றிக்கொண்டார். கரை சேர்ந்தார். ஆனால், அவர் பற்றியது ஒரு மனித சவத்தை என்பதை அவர் உணர்ந்தாரில்லை. மோகம்! மனைவியின் வீட்டை அடைந்துவிட்டார்.

ஆனால், வாயில் கதவைத் தட்டக் கைகள் தயங்கின. மோகம் திருட்டுத்தனமானது. அது நேர்வழியில் போய் எதிர்ப்படும் இடையூறுகளையும், கேள்வி களையும் சந்திக்க வெட்கப்படுவது. ஆகவே அவர் வீட்டின் பின்னால் சென்று மாடிக்குப் போக வழி பார்த்தார். மேலே மரத்திலிருந்து தொங்கும் ஒரு கயிற்றைப் பற்றிக்கொண்டு தாவினார். ஆனால், அது கயிறல்ல, பாம்பு என்பதை அறியமுடியாதபடி மோகம் அவரை மூழ்க்கியிருந்தது. மாடிக்குத் தாவி, மனைவியின் அறைக்குள் நுழைந்துவிட்டார். ஓடிவந்ததைவிட மோகத்தால் அதிகம் மூச்சிறைத்தது அவருக்கு.

அவரைப் பார்த்த மனைவி, ‘என் பொருட்டு இத்தனை சிரமங்களைக் கடந்து வந்தீர்களே, இதற்கு பதில் எந்த சிரமமும் படாமல், எல்லாவற்றினும் மேலான பேரின்பப் பொருளான  ஸ்ரீராமனை ஜபித்துத் தாங்கள் தரிசித்திருக்க முடியுமே! அந்த அரிய ஆனால், எளிய வாய்ப்பைக் கைநழுவ விட்டீர்களே!’ என்று அவர்மேல் பரிதாபப்பட்டாள். பளிச்சென்று அவர் மனதிலிருந்து மோகத்திரை அகன்றது.

உடனே ஞானம் பிறந்தது. தன் ஐம்புலன்களை மிகக் கேவலமாக அவர் மதிக்க ஆரம்பித்தார். அந்தக் கணமே ஞானம் அவரைச் சூழ்ந்துகொண்டது. பத்தினி தாசனாக இருந்த அவர், ஏகபத்தினி விரதனின் தாசனானார். துளசி தாசர் மோகத்தில் மூழ்கியிருந்தார். அதனால் அவருக்கு உண்மை சொரூபங்கள் எல்லாமே மாயத் தோற்றங்களாகவே தெரிந்தன. ஒரு சவம் அவருக்கு மரக்கட்டையாகத்தான் தெரிந்தது, ஒரு பாம்பு அவருக்குக் கயிறாகத்தான் தெரிந்தது. அது மரக்கட்டையல்ல, சவம்தான் என்றோ, கயிறல்ல, பாம்புதான் என்றோ அவர் தெரிந்து கொண்டிருந்தாரானால், அப்போதே அவருக்கு இயல்பான பயம் உருவாகியிருக்கக்கூடும், அதிலிருந்து ஞானமும் தோன்றியிருக்கக் கூடும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மோகத்தைத் தீர்த்துக் கொள்ள எந்தப் பொருளை அவர் நாடினாரோ, அந்தப் பொருளே அவருக்கு ஞானத்தை ஊட்டியதுதான்! சவம், பாம்பு போன்ற உபகரணங்கள்அவருக்கு ஞானத்தை அருளவில்லை, காரணம் தான் நிறைவாக அடையப்போகும் மோக போகத்திலேயே அவருடைய மனம் முழுமையாக ஒன்றியிருந்ததுதான்!தெருவில் நடந்து போகிறோம். சற்றுத் தொலைவில் பளபளப்பாக ஏதோ மின்னுகிறது. அது நிச்சயம் நாணயமாகத்தான் இருக்கும் என்று தீர்மானித்து விடுகிறோம். உடனே அதை அடைய வேட்கை உள்ளத்துள் எழுகிறது. சற்று விரைவாக அதை நோக்கிச் செல்கிறோம். சாலையில் ஓரிரு வாகனங்கள் வேகமாகக் குறுக்கிடுகின்றன.

அந்த ஆபத்தை அலட்சியப்படுத்துகிறோம். விரையும் கால்கள் மலத்தை மிதித்துவிடுகின்றன. அந்த அசிங்கத்தையும் நாம் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் நம் நோக்கம், மோகமாய் அந்த நாணயத்தின் மீதே குவிந்திருக்கிறது. இந்த இடர்ப்பாடுகளை எல்லாம் கடந்து நாணயத்தின் அருகே போகிறோம். குனிந்து கையால் எடுக்கிறோம். ஆனால் அது நாணயமல்ல, ஏதோ மதிப்பற்ற தகர வட்டம்!

அந்தப் பொருளைப் பார்த்ததுமே அது நாணயமாகத்தான் இருக்கும் என்று நாம் தீர்மானித்துக் கொண்டுவிடுவதன் கோளாறு இது. அது மதிப்புள்ள ஒரு பொருள். அதை நாம் கைப்பற்றிவிட வேண்டும். முக்கியமாக, பிற யாரும் பார்த்துவிடுமுன் நாம் அதைப் பறித்து நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டுவிட வேண்டும் என்ற பேராசை!வாகனங்கள் குறுக்கிடும்போதாவது ‘சே, அது நமக்கு வேண்டாம், அனாவசியமாக வாகனத்தில் சிக்கி ஆபத்தை வரவழைத்துக்கொள்வானேன் அல்லது அந்த வாகன ஓட்டியின் வசவுக்கு ஆளாவானேன் என்று எண்ணியாவது நாணய மோகத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டும்.

மலத்தை மிதித்த பிறகாவது, இத்தனை கஷ்டப்பட்டு, உடலை வருத்திக்கொண்டு, தன்மானத்திற்கு பங்கம் விளைவித்துக்கொண்டு அந்த நாணயத்தை அடையத்தான் வேண்டுமா என்று வெட்கி விலகியிருக்க வேண்டும். குறுக்கு வழியானாலும், ஆபத்தும், அசிங்கமும் நிறைந்ததானாலும், நாணயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற இச்சையே நமக்கு இப்படி ஒரு பாதையை வகுத்துக்கொடுக்கிறது என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும்.

இல்லை.. அப்படிச் செய்யவில்லை. ஆனால், நாணயம் என்று நம்பிச் சென்று கைப்பற்றிய பொருள், எதற்குமே பயன்படாத வெற்று உலோகச் சில்லு என்று தெரியும்போதுதான் நமக்கு ஞானம் பிறக்கிறது. அவமானத்துடன் நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் பார்க்கிறோம். யாராவது நாம் ஏமாந்து கூனிக் குறுகுவதை கவனித்து விட்டார்களோ என்று மனக்கூச்சம் கொள்கிறோம். சரி, அது மதிப்புள்ள நாணயமாகவே இருக்கட்டும். வேண்டாம் என்று நினைக்கும் பற்றற்றதாக மனதை வளர்த்துக்கொள்ள நமக்குத் தெரியவில்லை. அல்லது சரி, எதற்காக ரிஸ்க் எடுத்துக்கொண்டு போய் அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

வேறு யாருக்காவது கிடைத்துவிட்டுப் போகட்டும் என்று பெருந்தன்மை கொள்ளவும் சுயநலம் இடம் கொடுக்கவில்லை. வெற்று உலோகச் சில்லு நமக்குப் புகட்டும் ஞானம், இனி நாம் இதுபோன்ற அற்பங்களுக்கு ஆசைப்படக்கூடாது என்பதுதான்.யாரும் எதிலும் விருப்பம் கொள்வது என்பது இயல்பானதுதான். ஆனால், அந்த விருப்பம் நிறைவேறத்தான் வேண்டுமா என்று முடிவெடுக்க வேண்டியதும் நம் பொறுப்பாகி விடுகிறது. இதைத்தான் கிருஷ்ணன் வலியுறுத்துகிறார். ‘இச்சைகள் உன் எதிரிகள் அல்ல, ஆனால், அவற்றை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டியதும் உன் பொறுப்பே’ என்று எச்சரிக்கிறார்.

இந்த்ரியாணி மனோபுத்திரஸ்யாதிஷ்டானமுச்யதே
ஏதைர்விமோஹயத்யேஷ ஞானமாவ்ருத்ய தேஹினம் (3:40)

‘‘இந்திரியங்களை ஊக்குவிப்பது யார்? மனமும், புத்தியும்தான். இந்திரியங்களால் வெளிப்படும் உணர்வுகள் எல்லாம் மனதாலும், புத்தியாலும் நிர்வகிக்கப்படுபவைதான். இவை இரண்டும்தான் ஞானத்தை மறைத்து விடுகின்றன. ஜீவாத்மாவை மோகத்துள் அமிழ்த்துகின்றன.’’ ஆசை, மிகவும் பலம் வாய்ந்தது. அது அதிரடியாகத்தான் எதையுமே ஆக்கிரமித்துக் கொள்கிறது. முதலில் வெகு சுலபமாக மனதைத் தனக்கு அடிமைப்படுத்துகிறது.

அதற்குப் பிறகு புத்தியைக் கலங்க அடிக்கிறது. அதற்குப் பிறகு இந்திரியங்கள் எல்லாம் ஆசையின் முயற்சி இல்லாமலேயே தாமே அதற்கு கொத்தடிமைப் பணிகளைச் செய்கின்றன. ஆக, ஆசையை முதலிலேயே மனம் அனுமதிக்காமல் விட்டுவிடுமானால், அடுத்தடுத்து புத்தியும், புலன்களும் பாதிக்கப்பட வேண்டியிருக்காது. ஜென் கதை ஒன்று சொல்வதுபோல, ஆசை காற்று மாதிரி. அது கண்ணுக்குத் தெரியாது. முதலில் எந்தப் புலனாலும் உணர முடியாதது. ஆனால் அது வெகு எளிதாக நம் மனம் என்ற பாண்டத்துக்குள் புகுந்துவிடுகிறது. பாண்டத்துக்கோ அது தன்னுள்ளே புகுந்ததும் தெரியாது. அங்கேயே அது நிரந்தரமாகத் தங்கியிருப்பதும் தெரியாது.

சரி, அடுத்தடுத்த விளைவுகளுக்கு இடமளிக்காதபடி இந்தக் காற்றை அந்தப் பாண்டத்திலிருந்து எப்படி வெளியேற்றுவது? பாண்டத்தினுள் நீரை நிரப்புவோம். இப்போது பாண்டம் நிறைவு பெறுகிறது. தான் உட்புகுந்தாலும் பாண்டத்தை ஓர் வெற்றிடப் பாத்திரமாகவே தோன்றிடச் செய்த காற்று, இப்போது வெளியேறிவிடுகிறது. ஆமாம், எப்படி புகுந்ததோ அப்படியே வெளியேறியும் விடுகிறது. அதாவது, எளிதாகத் தனக்குள் புகுந்ததை, எளிதாக வெளியேற்றும் வல்லமை பெற்றதாக மனம் விளங்குகிறது என்பதும் நமக்குப் புரிகிறது. அதோடு எந்தப் பரிமாணமும் இல்லாதது காற்று என்பதும் புரிகிறது. எங்கெல்லாம் மிகச்சிறு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் புகுந்துவிடும் இயல்புடைய காற்றைப் போலத்தான் ஆசையும்.

கண், காது, மூக்கு, வாய் என்று எல்லாவற்றையும் மூடிக்கொண்டாலும், அவற்றையெல்லாம் மீறி ஆசை, மனம் என்ற பாண்டத்துக்குள் புகும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் நம் மனம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறது அல்லது வெறுக்கிறது. தனக்குள் புகுந்துவிட்ட ஆசையை, மோகமாக வளர்ப்பவை, அது தொடர்பு கொண்டுள்ள கண், காது, மூக்கு, வாய், மேனி ஆகிய ஐம்புலன்கள்தான் என்ற உண்மையை மனம் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை.

தனக்குள் புகுந்த ஆசையை வெளியேற்ற மனம் பெரும் பாடுபடும்போது, அதனுடன் ஒத்துழைக்காமல் தத்தமது போக்குப்போல இந்திரியங்கள் துரோகச் செயலாக ஆசையை வளர்க்கின்றன. இதனால், முதலில் இடம் கொடுத்துவிட்ட மனம், அடுத்தடுத்த அவமானங்களாலும், குற்ற உணர்வாலும் அலைக்கழிக்கப்படுகிறது. ஆக இந்த பிரச்னைகளிலிருந்து மீள ஒரே வழி, ஆசைக்கு மனம் கொஞ்சமும் இடம் கொடுக்காமலிருப்பதுதான்.

‘மோகத்தைக் கொன்றுவிடு அல்லாலென்றன்
மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்துவிடு அல்லாலதில்
சிந்தனை மாய்த்துவிடு
யோகத் திருத்திவிடு அல்லாலென்றன்
ஊனைச் சிதைத்துவிடு
ஏகத் திருத்துலகம் இங்குள்ளன
யாவையும் செய்பவளே!

பந்தத்தை நீக்கிவிடு அல்லாலுயிர்ப்ப
பாரத்தை போக்கிவிடு
சிந்தை தெளிவாக்கு அல்லாலிதைச்
செத்த வுடலாக்கு
இந்த பதர்களையே நெல்லாமென்
எண்ணி இருப்பேனோ
எந்த பொருளிலுமே உள்ளேநின்றியங்கி
இருப்பவளே.
உள்ளம் குளிராதோ பொய்யாணவ
ஊன மழியாதோ?

உள்ள முருகாதோ அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள்ளக் கருணையிலே இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே அனைத்திலு
மேவி இருப்பவளே!’

– என்று பராசக்தியின் அருள்வேண்டிப் பாடுகிறார் மகாகவி பாரதியார். மோகம் கொள்வதைவிட உயிர் தரிக்காமலிருப்பதே சிறப்பு என்கிறார் அவர். கண்ணனைப் பாடியவரல்லவா, அவனுடைய கீதை சாரத்தையும் தன் நோக்கிலேயே தருகிறார்.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post மோகத்தைக் கொன்றுவிடு! appeared first on Dinakaran.

Tags :
× RELATED சரணம் ஐயப்பா… சாமி சரணம் ஐயப்பா…