மோடி மீடியா கருத்துக்கணிப்பு பொய் இந்தியா கூட்டணி 295 தொகுதியில் வெல்லும்: ராகுல் காந்தி உறுதி

புதுடெல்லி: பல்வேறு நிறுவனங்கள் தரப்பில் வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை ‘மோடி மீடியா கருத்துக்கணிப்பு’ எனக்கூறிய ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு டிவி சேனல்களின் சார்பில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சி எம்பிக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்திய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘இது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு அல்ல, மோடி மீடியாவின் கருத்துக்கணிப்பு’’ என்றார். இந்தியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், ‘‘நீங்கள் சித்து மூசே வாலாவின் ‘295’ பாடலைக் கேட்டுள்ளீர்களா? அதுபோல, 295ல் நாங்கள் வெல்வோம்’’ என்றார்.

பின்னர், முதல் 100 நாள் செயல்திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: ‘நாங்கள் தான் மீண்டும் வருவோம், நான் தான் மீண்டும் பிரதமர் ஆவேன்’ என்பதெல்லாம் மற்றவர்களை மனதளவில் வீழ்த்தும் விளையாட்டு. இதன் மூலம் மோடி, நாட்டின் நிர்வாக கட்டமைப்பு, அரசு உயர் அதிகாரிகளுக்கு சமிக்ஞை அனுப்புகிறார். ஆனால் இந்த அழுத்த தந்திரங்களுக்கு பயப்படாமல், நியாயமான வாக்கு எண்ணிக்கைக்கு பொறுப்புள்ள அதிகாரிகள் தங்கள் பணியை சரியாக செய்வார்கள் என நம்புகிறோம். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் முற்றிலும் போலியானவை. இது எல்லாமே வெளியேறும் பிரதமர் மோடி மற்றும் வெளியேறும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உளவியல் ரீதியான விளையாட்டின் ஒரு பகுதி. அமித்ஷா 150 மாவட்ட கலெக்டர்களை அழைத்து பேசியிருக்கிறார். இது அப்பட்டமான வெட்கக் கேடான மிரட்டல். இது பாஜ எவ்வளவு அவநம்பிக்கையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

கருத்துக்கணிப்புகளுக்கும், உண்மையில் நடக்கப் போவதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கருத்துக்கணிப்பில், சில மாநிலங்களில் உள்ள மொத்த இடங்களை விட பாஜ கூட்டணிக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே இந்த கருத்துக்கணிப்புகள் வேண்டுமென்றே தேர்தல் மோசடியை நியாயப்படுத்தும் முயற்சி. இவிஎம்களில் மோசடி செய்வதை நியாயப்படுத்தும் திட்டமிட்ட முயற்சி. மேலும் இந்தியா கூட்டணி கட்சி தொண்டர்களின் மன உறுதியைக் குறைக்கும் உளவியல் நடவடிக்கையும் கூட. நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். இந்தியா கூட்டணியில் நாங்கள் அனைரும் மாநில வாரியாக ஆய்வு செய்து பார்த்ததில், இந்தியா கூட்டணி 295 தொகுதிகளுக்கு குறைவாக பெறப்போவதில்லை. ஜூன் 4ம் தேதி உண்மையான முடிவுகள், கருத்துக்கணிப்பு முடிவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இவ்வாறு கூறினார்.

 

The post மோடி மீடியா கருத்துக்கணிப்பு பொய் இந்தியா கூட்டணி 295 தொகுதியில் வெல்லும்: ராகுல் காந்தி உறுதி appeared first on Dinakaran.

Related Stories: