×

லோக்சபா தேர்தல் பணிக்காக கூட்டணி கட்சி எம்பிக்களை சந்திக்கும் மோடி: இன்று முதல் ஆக. 10ம் தேதி வரை நடக்கிறது

புதுடெல்லி: அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் ஆளும் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்பிக்களை பகுதி வாரியாக 10 குழுக்களாக பிரித்து, அவர்களை பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டார். இதற்காக பாஜக மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்நிலையில் மேற்கு உத்தரபிரதேசம், பண்டேல்கண்ட், பிரிஜ் பகுதி எம்பிக்கள் குழுவுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 2வது ஆலோசனை கூட்டம் இரவு 7 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒடிசா மாநில எம்பிக்கள் குழு பங்கேற்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் மூத்த அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் , தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் ஈடுபடவுள்ளனர். இவர்களுடன் மூத்த தலைவர்கள் புபேந்திர யாதவ், சர்பானந்த சோனாவால், பிரகலாத் பட்டேல், அர்ஜுன் ராம் மேக்வால், ஆகியோர் துணையாக இருப்பார்கள்.

இன்று ெதாடங்கும் ஆலோசனை கூட்டம், வரும் ஆக. 10ம் தேதி வரை அடுத்தடுத்து நடைபெறவுள்ளது. பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள 160 தொகுதிகளை அடையாளம் கண்டு, அந்த தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாவும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக வியூகங்களை வகுக்க உள்ளதாகவும் மூத்த தலைவர்கள் கூறினர்.

The post லோக்சபா தேர்தல் பணிக்காக கூட்டணி கட்சி எம்பிக்களை சந்திக்கும் மோடி: இன்று முதல் ஆக. 10ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Modi ,Lok ,Sabha ,New Delhi ,Lok Sabha ,BJP ,
× RELATED யாருமே வெல்ல முடியாதவர் அல்ல ஆணவத்தை...