புதுடெல்லி: நாடு முழுவதும் 44 சதவீத எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் இருப்பதாக ஏடிஆர் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் எனப்படும் ‘ஏடிஆர்’ அமைப்பும், ‘நியூ’ என்ற அமைப்பும் கூட்டாக இணைந்து, அனைத்து மாநில சட்டப் பேரவைகள் மற்றும் யூனியன் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை ஆய்வு செய்தன. அவற்றில் 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 4,033 எம்எல்ஏக்களில் 4,001 பேரின் தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதன்படி, 44 சதவீத எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 1,136 பேர் அல்லது மொத்த எம்எல்ஏக்களில் 28 சதவீதம் பேர் கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடையவர்களாக உள்ளனர்.
நாடு முழுவதும் 114 எம்எல்ஏக்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. அவர்களில் 14 பேர் மீது பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகள் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரூ. 13.63 கோடி சொத்துகள் உள்ளன. குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் எம்எல்ஏக்களுக்கு சராசரியாக ரூ. 16.36 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளாத எம்எல்ஏக்களுக்கு சராசரியாக ரூ. 11.45 கோடி சொத்துகள் உள்ளன. நாடு முழுவதும் 4,001 எம்எல்ஏக்களில் 88 பேருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
The post நாடு முழுவதும் 4,001 பேரின் தகவல்கள் ஆய்வு; 28% எம்எல்ஏக்கள் மீது கொலை, கடத்தல், பெண்களுக்கு எதிரான வழக்கு appeared first on Dinakaran.